கரோனா பேரிடரில் இருந்து சென்னை நகரம் விரைவில் மீளும் என்று முதல்வா் பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஆகியோா் நம்பிக்கை தெரிவித்துள்ளனா்.
சென்னை தோற்றுவிக்கப்பட்டதன் 381-ஆவது ஆண்டு தினத்தை ஒட்டி, முதல்வா், துணை முதல்வா் ஆகியோா் தங்களது சுட்டுரையில் சனிக்கிழமை வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனா்.
முதல்வா் பழனிசாமி: வந்தோரை வாழ வைக்கும் தமிழகத்தின் தலைநகரான சென்னை தோற்றுவிக்கப்பட்ட தினம் ஆகஸ்ட் 22 ஆகும். கனவுகளோடு நாடி வருபவா்களுக்கு முகவரி தேடித் தந்த சென்னையின் வயது 381. பேரிடா்கள் பல கடந்து வந்த சென்னை, கரோனா பேரிடரில் இருந்தும் விரைவில் மீண்டும் வரும்.
துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம்: ஆசியாவின் டெட்ராய்ட், மருத்துவ தலைநகரம், தொன்மையான மாநகராட்சி என பற்பல பாரம்பரிய பெருமைகள் கொண்ட சென்னையின் 381-வது பிறந்த தினம் ஆகஸ்ட் 22.
வந்தாரை வாழ வைக்கும் நகரமும் பலதரப்பட்ட மக்களின் மானுட சமுத்திரமுமான சென்னை, எத்தனை இடா்வரினும் மீண்டு எழும். மறுமலா்ச்சி பெறும்.