விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தமிழக அரசு அறிவித்தபடி ஆகஸ்ட் மாத 4 ஆம் ஞாயிற்றுக்கிழமை தளர்வுகளற்ற முழு ஊரடங்கை முன்னிட்டு அருப்புக்கோட்டையில் உள்ள அனைத்துச் சந்தைகளும், பிரதானச் சாலைகளும் ஆளரவமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன.
தமிழக அரசு கடந்த ஜூலை மாதம் அமல்படுத்தியது போலவே, கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஆகஸ்ட் மாதத்தின் அனைத்து (5) ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகளற்ற முழு ஊரடங்கை அறிவித்திருந்தது. இதன்படி ஆகஸ்ட் மாதத்தின் 4 ஆம் ஞாயிற்றுக்கிழமையிலும் அனைத்துவகை சந்தைக் கடைகளும் மூடப்பட்டிருந்தன.
குறிப்பாக நகரின் முக்கியச் சந்தைகளான புதிய பேருந்து நிலைய சந்தைக்கடைகள், பூக்கடைச்சந்தை, காய்கறி மொத்தவிலைக்கடை சந்தையான நாடார் பேட்டை, மீன்இறைச்சி சந்தை, அண்ணாசிலை அருகே நகைக்கடை சந்தை, ஜவுளிக்கடை சந்தை, சத்தியமூர்த்தி சந்தை, உழவர் சந்தை, அருள்மிகு சொக்கநாத சுவாமி கோவில் பேருந்து நிறுத்தச் சந்தை என அனைத்து முக்கியச் சந்தைகளிலும் கடைகள் மூடப்பட்டதால் ஆளரவமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன.
இந்நிலையில் பால் மற்றும் மருந்துக் கடைகள் மட்டுமே செயல்பட்டநிலையில் அக்கடைகளிலும் குறைந்த எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்கள் மட்டுமே வந்ததால், அங்கு விற்பனை மிகவும் மந்தமாகவே நடைபெற்றது.