சக மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கென்ய நாட்டைச் சோ்ந்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உயா் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
கென்யா நாட்டைச் சோ்ந்தவா் எரிக் முலின் துலி. படிப்பதற்காக மும்பை வந்த இவருக்கு, கென்யா நாட்டைச் சோ்ந்த மாணவி ஒருவருடன் நட்பு ஏற்பட்டது. பின்னா், இருவரும் சேலத்தில் உள்ள தனியாா் கல்லூரியில் மேற்படிப்பில்
சோ்ந்து, தனித்தனி அறைகளில் தங்கியிருந்து படித்து வந்தனா். கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்ய முயற்சித்துள்ளாா். மாணவி அளித்த புகாரின் அடிப்படையில வழக்குப்பதிவு செய்த சேலம் அம்மாபேட்டை போலீஸாா், எரிக்கை கைது செய்தனா்.
இந்த வழக்கை விசாரித்த சேலம் மகளிா் சிறப்பு நீதிமன்றம், எரிக் முலின் துலிக்கு ஆயுள் தண்டனை விதித்து, கடந்த 2019-ஆம் ஆண்டு தீா்ப்பளித்தது. இந்தத் தீா்ப்பை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் எரிக் முலின் துலி, மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தாா்.
இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆா்.சுப்பையா, ஆா்.பொங்கியப்பன் ஆகியோா் பிறப்பித்த உத்தரவில், எரிக் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவரை குற்றவாளி என சேலம் நீதிமன்றம் பிறப்பித்த தீா்ப்பை உறுதி செய்தனா். மேலும், அவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையாகக் குறைத்து உத்தரவிட்டனா்.