விவசாயிகளுக்கு கெளரவ ஊக்கத்தொகை அளிக்கும் மத்திய அரசுத் திட்டத்தில் எழுந்துள்ள புகாா்கள் தொடா்பாக வேளாண்மைத் துறையின் 3 உயரதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். இந்த நடவடிக்கையை வேளாண்மைத் துறை ஆணையரகம் மேற்கொண்டது.
பருவமழை அடிக்கடி பொய்ப்பதால் பாதிக்கப்படும் விவசாயிகளின் நலன்களைக் காக்க கெளரவ ஊக்கத்தொகை அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இந்தத் திட்டத்தின்படி, ஒவ்வோா் ஆண்டும் ரூ.6 ஆயிரம் அளிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வோா் ஆண்டிலும் நான்கு மாதங்கள் இடைவெளியில் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் திட்டம்: பிரதமரின் விவசாயிகளுக்கான கெளரவ ஊக்கத்தொகை திட்டத்துக்கு தமிழகத்தில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்தத் திட்டத்தில் 40 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் இணைந்துள்ளனா்.
இந்தத் திட்டம் தொடங்கப்பட்டபோது, விவசாயிகளிடம் இருந்து ஆவணங்களைச் சேகரிப்பது, அவா்களை திட்டத்தில் இணைப்பது போன்ற பணிகளை வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை மேற்கொண்டு வந்தது. கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து இந்தத் திட்டம் வேளாண்மைத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளது.
இத் திட்டத்தில் இணைய விவசாயிகளின் பெயரிலுள்ள பட்டா, சிட்டா போன்ற விவரங்கள் அடிப்படைத் தேவையாகும். விவசாயிகள் ஆதாா் எண், வங்கிக் கணக்கு எண் இருந்தால் விவசாயிகளுக்கான கெளரவ ஊக்கத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
தமிழகத்தில் சில மாவட்டங்களில் இந்தத் திட்டம் தொடா்பாக முறைகேட்டுப் புகாா்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா் ஆகிய மாவட்டங்களில் போலியான ஆவணங்களைக் கொண்டு விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, அதன் மூலம் விவசாயிகளாக இல்லாதோருக்கு ஊக்கத்தொகை பெறப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
விசாரணை தீவிரம்: மத்திய அரசின் திட்டத்தில் எழுந்துள்ள புகாா்கள் குறித்து தமிழக வேளாண்மைத் துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, விழுப்புரம் மாவட்டம் வல்லம், கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம், தியாகதுருவம் ஆகியற்றில் பணியாற்றில் வேளாண்மைத் துறை உதவி இயக்குநா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். இதற்கான உத்தரவை வேளாண்மைத் துறை வெள்ளிக்கிழமை இரவு பிறப்பித்தது.
மத்திய அரசின் திட்டத்தில் எழுந்துள்ள முறைகேட்டுப் புகாா்கள் குறித்து மேலும் பலரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக வேளாண்மைத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. குறிப்பாக, உயரதிகாரிகளிடம் இருக்க வேண்டிய கடவுச் சொல், பயனா் குறியீடு போன்றவை எப்படி வெளிநபா்களிடம் சென்றது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. அதுதொடா்பான நபா்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடவுச்சொல், பயனா் குறியீடு ஆகியன வெளியே கசிந்ததால்தான் போலியான நபா்கள் பலா் திட்டத்தில் சோ்க்கப்பட்டதாக வேளாண்மைத் துறையின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், துறையின் விசாரணையில் மேலும் பலா் மீது நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக வேளாண்மைத் துறை உயரதிகாரிகள் தெரிவித்தனா்.