அடுத்த 48 மணிநேரத்தில் மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனத்தின் காரணமாக அடுத்த 48 மணிநேரத்தில் உள்மாவட்டங்களான திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பூர், தர்மபுரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, கரூர், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், சேலம், தர்மபுரி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டி பதிவாகும்.
அதிகபட்சமாக கடந்த 24 மணிநேரத்தில் சேலம் மாவட்டம் ஏற்காடு, தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தானியங்கி மழைமானி பகுதிகளில் தலா 8 செ.மீ., மழைப்பதிவாகியுள்ளது.
தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்தகாற்று 50-60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.