தமிழ்நாடு

'மேகதாது அணை கட்ட கர்நாடகத்துக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது'

23rd Aug 2020 04:18 PM

ADVERTISEMENT

மேகதாது அணை கட்ட கர்நாடகத்துக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், தமிழக எல்லைக்கு முந்தைய மேகதாது பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணையை கர்நாடக அரசு கட்டியே தீரும் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறியிருக்கிறார். மேகதாது அணை விவகாரம் உச்சநீதிமன்றத்தில் இருக்கும் நிலையில், இரு மாநிலங்களுக்கும் இடையில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா இவ்வாறு கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது.

மைசூரில் கிருஷ்ணராஜசாகர் அணையில் சிறப்பு வழிபாடு நடத்திய பிறகு இதை அறிவித்த எடியூரப்பா, மேகதாது அணை கட்டுவதற்கான ஒப்புதல் மத்திய அரசிடமிருந்து விரைவில் பெறப்படும்; கர்நாடகத்தின் பாசனப்பரப்பை பெருக்குவது தான் தமது அரசின் லட்சியம் என்று கூறியிருக்கிறார். எடியூரப்பாவின் இந்த அறிவிப்பு தமிழக விவசாயிகளிடமும், பொதுமக்களிடமும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

காவிரி சிக்கலைப் பொறுத்தவரை மத்தியில் ஆளும் அரசுகள் கர்நாடகத்துக்கு ஆதரவாகத் தான்  செயல்பட்டு வருகின்றன. அந்த துணிச்சலில் தான் எடியூரப்பா போன்றவர்கள் மேகதாது அணையை  கட்டியே தீருவோம் என்கிறார்கள். காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படுவதற்கு எள் முனையளவும் வாய்ப்பு இல்லை என்ற நிலை ஏற்படுத்தப்பட்டால் தான் காவிரி பாசன மாவட்ட உழவர்கள் நிம்மதியாக இருக்க முடியும். எனவே, மேகதாது அணை தொடர்பாக கர்நாடக அரசுக்கு இதுவரை அளிக்கப்பட்ட அனைத்து அனுமதிகளையும் மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும். மேலும் இந்த விஷயத்தில் தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடகத்திற்கு மத்திய அரசு எந்த அனுமதியும்  தரப்படாது என்பதை மத்திய அரசு கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
 

ADVERTISEMENT

Tags : PMK
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT