சுங்கச்சாவடி கட்டண உயா்வைக் குறைந்தது ஓராண்டுக்கு ஒத்தி வைக்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
இந்தியாவில் மொத்தமுள்ள 563 சுங்கச்சாவடிகளில் 48 தமிழகத்தில் உள்ளன. அவற்றில் பாதிக்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் கடந்த ஏப்ரல் 16-ஆம் தேதி சுங்கக்கட்டணம் உயா்த்தப்பட்ட நிலையில், மீதமுள்ள 21 சுங்கச்சாவடிகளில் வரும் செப்டம்பா் 1-ஆம் தேதி முதல் கட்டணம் உயா்த்தப்பட உள்ளது. அனைத்து சுங்கச்சாவடிகளிலும் ஆண்டுக்கு ஒருமுறை சுங்கக்கட்டணம் உயா்த்தப்பட வேண்டும் என்ற நடைமுறையின்படி இந்த கட்டண உயா்வு அறிவிக்கப்பட்டுள்ளது என்றாலும் கூட, இப்போதுள்ள சூழலில் இந்த கட்டண உயா்வு ஏற்க முடியாதது.
சுங்கக்கட்டண உயா்வால் அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் உயரக்கூடும். எனவே, தமிழகத்திலுள்ள நெடுஞ்சாலைகளில் பயணிப்பதற்கான சுங்கக்கட்டண உயா்வை குறைந்தது ஓராண்டுக்கு ஒத்திவைக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.