தமிழ்நாடு

மேல்நிலை வகுப்புகள், தொழில்நுட்பக் கல்லூரிகள் எப்போது தொடங்கப்படும்? - உயர்நீதிமன்றம் கேள்வி

21st Aug 2020 12:25 PM

ADVERTISEMENT

மேல்நிலை வகுப்புகள் மற்றும் பல்தொழில்நுட்பக் கல்லூரிகள் எப்போது தொடங்கப்பட உள்ளது என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா பரவல் காரணமாக மார்ச் மாத இறுதியில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சிப் பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது. காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் வருகைப்பதிவின் அடிப்படையில் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு, மதிப்பெண் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், பள்ளிகளில் படிக்காமல் நேரடியாக பத்தாம் வகுப்புக்கு தேர்வு எழுத தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு பெற்றிருந்த தனித்தேர்வர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கக் கோரி, கோவையைச் சேர்ந்த வருண்குமார் என்ற தனித்தேர்வரின் தந்தை பொறியாளர் எஸ்.பாலசுப்ரமணியன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் 11 ஆம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கையும், பல் தொழில்நுட்டக் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கையும் ஆகஸ்ட் 24 ஆம் தேதி தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனி தேர்வர்களை தேர்ச்சி பெற்றதாக அறிவிக்காமல் பாரபட்சம் காட்டுவதால், அவர்கள் ஒராண்டை இழக்க நேரிடும்.

ADVERTISEMENT

எனவே, தனித்தேர்வர்களுக்கான முடிவுகளை வெளியிடும்வரை, மேல்நிலைப்பள்ளி மாணவர் சேர்க்கையையும், பல் தொழில்நுட்பக்  கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையையும் ஒத்தி வைக்க வேண்டும். தனித்தேர்வர்களையும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவித்து, மதிப்பெண் பட்டியலை வழங்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் காணொலி காட்சி மூலம் விசாரித்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள், மேல்நிலை வகுப்புகள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகள் எப்போது தொடங்கப்பட உள்ளது என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை  வரும் ஆகஸ்ட் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Tags : school
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT