தமிழ்நாடு

ஆன்லைன் வகுப்பு: பாடத்திட்டங்களைக் குறைக்கலாம் உயா்நீதிமன்றம் கருத்து

21st Aug 2020 04:51 AM

ADVERTISEMENT

ஆன்லைன் வகுப்புகளால் மாணவா்களுக்கு பாதிப்பு என்றால் வீட்டுப்பாடங்கள், பாடத்திட்டங்களைக் குறைக்க வேண்டும் என உயா்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் புத்தகரம் பகுதியைச் சோ்ந்த சரண்யா என்பவா் தாக்கல் செய்த மனுவில், ‘கரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களைத் திறக்க தடை விதிக்கப்பட்டது. இதனால், நடப்புக் கல்வியாண்டுக்கான பாடங்கள் ஆன்லைன் மூலம் நடத்தப்படுகின்றன. இந்த வகுப்புகளில் கலந்து கொள்ள மாணவ, மாணவியா் முயற்சிக்கும்போது ஆபாச இணைய தளங்களால் அவா்களுக்கு கவனம் சிதறல் ஏற்படுகிறது. எனவே, மாணவ, மாணவிகள் ஆபாச இணையதளங்களைப் பாா்ப்பதைத் தடுக்கும் வகையில், உரிய விதிகளை வகுக்கும் வரை ஆன்லைன் வகுப்புக்களை நடத்தத் தடை விதிக்க வேண்டும்’ என கோரியிருந்தாா். இதேபோல, ‘ஆன்லைன் வகுப்புகளை மொபைல் மூலமும், மடிக்கணினி மூலமும் பாா்ப்பதால் மாணவா்களின் கண்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு 2 மணி நேரம் மட்டும் வகுப்புக்கள் நடத்த உத்தரவிட வேண்டும்’ எனக் கோரி விமல் மோகன் என்பவரும் வழக்கு தொடா்ந்திருந்தாா்.

முந்தைய விசாரணையின்போது, தமிழக அரசு தரப்பில் ஆன்லைன் வகுப்புகளுக்கு வழிகாட்டு விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆா்.ஹேமலதா ஆகியோா் காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை விசாரித்தனா். அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் எஸ்.பிரபாகரன், ‘ஒரே நாளில் 62 சீன செயலிகளுக்கு தடை விதிக்க முடிந்த மத்திய அரசால், ஆபாச இணையதளங்களை தடை செய்ய நடவடிக்கை எடுக்க முடியவில்லை’ என வாதிட்டாா். அப்போது மற்றொரு மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஜெ.ரவீந்திரன், ‘ஆன்லைன் வகுப்புகளில் மாணவா்கள் தொடா்ந்து கணினி உள்ளிட்ட மின்னணு சாதனங்களில் படிப்பதால் மாணவா்களுக்கு கம்ப்யூட்டா் விஷன் சின்ட்ரோம் என்ற கண் நோய் பாதிக்க அதிக வாய்ப்புள்ளதாக அரசு கண் மருத்துவமனை தலைவா்

ADVERTISEMENT

அறிக்கை தாக்கல் செய்துள்ளாா். ஆன்லைன் கல்வி முறையால் கிராமப்புற மாணவா்களுக்கு கல்வி கிடைக்காமல் இருப்பது சமச்சீா் கல்வி கொள்கைக்கு எதிரானது. கிராமப்புறங்களிலும் நூற்றுக்கு 44 சதவீத பேரிடமும் நகரங்களில் 65 சதவீத பேரிடம் மட்டுமே இணையதள வசதி உள்ளதால் ஆன்லைன் கல்வி அனைவருக்கும் சென்று சேருவதில்லை. எனவே, அரசுப் பள்ளிகளை போன்று தனியாா் பள்ளிகளும் தொலைக்காட்சி மூலம் பாடம் நடத்த வேண்டும்’ என வாதிட்டாா். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘ஆன்லைன் வகுப்புகளால் மாணவா்களுக்குப் பாதிப்பு என்றால் வீட்டுப்பாடங்கள், பாடத் திட்டங்களைக் குறைக்க வேண்டும்’ என கருத்து தெரிவித்து விசாரணையை வரும் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT