தமிழ்நாடு

அரசு ஆய்வு கூட்டங்களுக்கு திமுக எம்.பி., எம்.எல்.ஏ.,க்களை அழைக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

21st Aug 2020 03:47 PM

ADVERTISEMENT

அரசு ஆய்வு கூட்டங்களுக்கு திமுக எம்.பி., எம்.எல்.ஏ.,க்களை அழைக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், அரசு விழாக்களிலும், ஆய்வுக்கூட்டங்களிலும், பிரதான எதிர்க்கட்சியாக விளங்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களை வேண்டுமென்றே தொடர்ந்து புறக்கணித்துவரும் அ.தி.மு.க. அரசுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். நேற்றைய தினம் தர்மபுரியில் நடைபெற்ற கரோனா குறித்த ஆய்வுக் கூட்டத்தில், கழகத்தின் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் டாக்டர் செந்தில்குமாரை அனுமதிக்க மறுத்ததோடு மட்டுமின்றி, “நான் நடத்தும் ஆய்வுக் கூட்டங்களில் எம்.பி.,யை எப்படி அனுமதிக்க முடியும்” என்று முதல்வர் பழனிசாமி கேள்வி எழுப்பியிருப்பது, ஜனநாயக விரோதம் மட்டுமல்லாமல்; பண்பாடற்ற செயல், அநாகரிகத்தின் உச்சம் என்றுதான் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். 

இதே போல் வேலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும் தி.மு.க. எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள். அ.தி.மு.க.,வின் பொதுக்குழுக் கூட்டத்திலோ அல்லது அக்கட்சி நடத்தும் பொதுக்கூட்டங்களிலோ பங்கேற்க அனுமதி கேட்கவில்லை; கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கோருவது, அரசின் செலவில் - அரசு அதிகாரிகளுடன் - அதுவும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கரோனா நோய் மற்றும் கரோனா மரணங்களைத் தடுப்பது குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கத்தான் அனுமதிக்க வேண்டும் என்று கோருகிறார்கள்.

ஆகவே அரசு விழாக்களுக்கும் - மாவட்ட அளவில் நடைபெறும் ஆய்வுக்கூட்டங்களுக்கும் திராவிட முன்னேற்றக் கழக எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களை அழைக்காமல் - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை அவமதிக்கும் போக்கை முதல்வரும் - அ.தி.மு.க. அமைச்சர்களும் உடனடியாகக் கைவிட வேண்டும்; கைவிடாவிட்டால் மக்கள் மேலும் கடுமையாகத் தண்டிப்பார்கள். பிரதான எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில், 'கரோனா காலத்தில்' நான் அளித்த பல ஆக்கபூர்வமான ஆலோசனைகளைக் கேட்காத முதல்வர் - இந்த விஷயத்தில், குறைந்தபட்சம் தமிழக சட்டப் பேரவைத் தலைவரின் அறிவுரைக்காவது செவிமடுக்க வேண்டும் என்றும், தி.மு.க. எம்.பி., எம்.எல். ஏ.,க்களை அரசு விழாக்களுக்கும், ஆய்வுக்கூட்டங்களுக்கும் அழைத்து, உரிய கண்ணியத்துடன் நடத்தி - மக்களின் குறைகளை எடுத்துரைத்துத் தீர்வுகாண வழிவகை ஏற்படுத்த வேண்டும் என்று முதல்வருக்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன்! இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
 

ADVERTISEMENT

Tags : DMK
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT