தமிழ்நாடு

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயற்சி

21st Aug 2020 03:50 PM

ADVERTISEMENT

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒருவர் தீக்குளிக்க முயற்சித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தென்காசி மாவட்டம் மேலக்கடையநல்லூர் கன்னார் தெற்கு தெருவை சேர்ந்தவர் கோ.மாரியப்பன் (38). கடையநல்லூர் மேலத் தெருவைச் சேர்ந்தவர் க.மாரிமுத்து. இவர்கள் இருவரும் சேர்ந்து பன்றிகளை வளர்ப்பதற்காக ஊருக்கு வெளியே இடம் பார்த்து கொண்டிருந்துள்ளனர். 

மேல கடையநல்லூர் மலம்பேட்டை தெருவைச் சேர்ந்த செ.பரமசிவன், சொக்கம்பட்டியை சேர்ந்த மா.செல்லத்துரை, பரமசிவனின் தாயார் ஆகியோர் கடையநல்லூர் வட்டம் கம்ப நேரி புதுக்குடி கிராமம் பகுதியில் தங்களுக்கு சொந்தமாக இடம் உள்ளது என கூறியுள்ளனர். மாரியப்பன் அந்த இடத்தை ரூ. 8 லட்சத்து 50 ஆயிரம் என கிரையம் பேசி முடித்துள்ளார். மேலும், பத்திரச் செலவிற்கு ரூ.50 ஆயிரம் சேர்த்து, ரூ.9 லட்சத்தைக் கொடுத்துள்ளனர். 15.10.2019 அன்று பணத்தை கொடுத்து விட்டு அவர்கள் தந்த பத்திரத்தை வாங்கி விட்டு வந்துள்ளனர். அவர்கள் தந்த பத்திரத்தை கொண்டு அந்த இடத்திற்கு சென்றுள்ளனர்.

அங்கு சென்ற பிறகுதான் அந்த இடம் கடையநல்லூர் வானுவர் தெருவைச் சேர்ந்த சே. முகம்மது யூசுப் என்பவருக்கு சொந்தமானது என்றும், அந்த இடத்திற்கும், பரமசிவனுக்கும் சம்பந்தமில்லை என தெரிய வந்துள்ளது. இது குறித்து ஆக.19ம் தேதியன்று பரமசிவன் வீட்டிற்கு மாரியப்பன், மாரிமுத்து உள்ளிட்டோர் சென்று தங்களுடைய பணத்தை திருப்பித் தருமாறு கேட்டுள்ளனர். பணத்தை திருப்பித் தர முடியாது மீறி கேட்டால் வெட்டி கொலை செய்து விடுவதாக அவர்கள் மிரட்டியுள்ளனர்.

ADVERTISEMENT

எனவே தங்களை ஏமாற்றி ரூ.9 லட்சம் பணம் பெற்று கொண்டு போலி ஆவணம் மூலம் பத்திரம் முடித்து கொடுத்து கொலை மிரட்டல் விடுத்த பரமசிவன், அவரது மனைவி, மாடசாமி ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுப்பதற்காக மாரியப்பன் தனது குடும்பத்தினருடன் வந்தார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நின்று கொண்டிருந்த போது மாரியப்பன் திடீரென தன் தலையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். இதனையடுத்து அங்கிருந்த காவலர்கள் அவரை தடுத்து நிறுத்தினர். தென்காசி உதவி ஆட்சியர் கோகிலா உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதைத் தொடர்ந்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.

 

Tags : tenkasi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT