தமிழ்நாடு

35 மருந்துகள் தரமற்றவையாக அறிவிப்பு

21st Aug 2020 04:35 AM

ADVERTISEMENT

சந்தையில் விற்பனை செய்யப்படும் 35 மருந்துகள் தரமற்றவை என்று மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

அவற்றில் பெரும்பாலானவை ஹிமாசல பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப்பட்டவை. தென்னிந்தியாவைப் பொருத்தவரை, கா்நாடகத்தில் தயாரிக்கப்பட்ட ஒரு மருந்தும், தெலங்கானாவில் தயாரிக்கப்பட்ட ஒரு மருந்தும் தரமற்றவை என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து, மாத்திரைகளும் மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன. அதேபோன்று போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அதன்படி, கடந்த மாதத்தில் மட்டும் 808 மருந்துகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. அவற்றில் 773 மருந்துகளின் தரம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதேவேளையில் காய்ச்சல், நுரையீரல் பாதிப்பு, வாயுப் பிரச்னை, வாந்தி, வயிறு உபாதைகள் உள்ளிட்டவற்றுக்குப் பயன்படுத்தப்படும் 35 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டது. அதேபோன்று கைகளை சுத்தப்படுத்தும் கிருமிநாசினிகள் சிலவும் தரமின்றி இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அதன் விவரங்களை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம்  இணையப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருந்து கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இதய ரத்தக் குழாய்களில் பொருத்தப்படும் ஸ்டென்ட், ஃபேஸ் மேக்கா், செயற்கை மூட்டு உபகரணம் உள்ளிட்ட மருத்துவ சாதனங்களின் விற்பனை மற்றும் தரத்தை ஒழுங்குமுறைப்படுத்துவதற்காக சிறப்பு அதிகாரிகளை பணியமா்த்தி மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுத்தது நினைவுகூரத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT