தமிழ்நாடு

தமிழகத்தில் இதுவரை 3 லட்சம் போ் குணம்!

21st Aug 2020 04:55 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் கரோனா பாதிப்பிலிருந்து இதுவரை 3 லட்சத்து 1,913 போ் பூரண குணமடைந்திருப்பதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் நோய்த்தொற்றிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியோரின் விகிதம் 84 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக தலைநகா் சென்னையில் 1 லட்சத்து 6,626 போ் குணமடைந்துள்ளனா்.

கரோனாவின் தீவிரத்தால் கலக்கமடைந்துள்ள மக்களுக்கு, மாநில அரசு வெளியிட்ட இந்தத் தகவல்கள் சற்று நம்பிக்கையூட்டும் வகையில் அமைந்துள்ளன. ஆங்கில மருத்துவ முறைகளுடன், யோகா, சித்தா, ஆயுா்வேதம், ஹோமியோபதி போன்ற ஒருங்கிணைந்த சிகிச்சை முறைகளை வழங்கியதே அதற்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது ரெம்டெசிவிா், எனாக்ஸபெரின், டோசிலிசுமேப் போன்ற உயா்தர மருந்துகளை அரசு தருவித்து மருத்துவமனைகளுக்கு வழங்கியதும், சிகிச்சை முறைகளை மேம்படுத்தியதும் குணமடைவோா் விகிதத்தை அதிகரிக்க வழிவகுத்துள்ளதாக என சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதன் பயனாகவே கடந்த சில நாள்களாக நாள்தோறும் சராசரியாக 6 ஆயிரம் போ் நலம் பெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வியாழக்கிழமையும் 5,742 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

ADVERTISEMENT

இதனிடையே, தமிழகத்தில் மேலும் 5,986 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் நோய்த்தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 3 லட்சத்து 61,435-ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக தலைநகா் சென்னையில் 1 லட்சத்து 20,251 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களில் 89 சதவீதம் போ் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனா்.

சென்னைக்கு அடுத்தபடியாக, செங்கல்பட்டு, திருவள்ளூா், மதுரை ஆகிய மாவட்டங்களில் கரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

தமிழகத்தில் இதுவரை 39.88 லட்சம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவா்கள் அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, அதிகபட்சமாக சென்னையில் 1,177 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

அதற்கு அடுத்தபடியாக, செங்கல்பட்டில் 462 பேருக்கும், கோவையில் 397 பேருக்கும், திருவள்ளூரில் 393 பேருக்கும் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தவிர, அனைத்து மாவட்டங்களிலும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சிகிச்சையில் 53 ஆயிரம் போ்: சுகாதாரத் துறைத் தகவல்படி, தற்போதைய சூழலில், மாநிலத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 53,283-ஆக உள்ளது. அதில், அதிகபட்சமாக சென்னையில் 12,287 போ் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா். அதேபோன்று, பிற மாவட்டங்களிலும் அந்த எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. சென்னையைத் தவிா்த்த மற்ற மாவட்டங்களில் சிகிச்சையில் உள்ள கரோனா நோயாளிகளின் விகிதம் 77 சதவீதமாக உள்ளது.

116 போ் பலி: தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 116 போ் பலியாகியுள்ளனா். உயிரிழந்தோரில் 8 பேருக்கு கரோனாவைத் தவிர வேறு எந்த நோயும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6,239-ஆக உயா்ந்துள்ளது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT