தமிழ்நாடு

ரகுமான் கான் மறைவு: மு.க.ஸ்டாலின், வைகோ இரங்கல்

20th Aug 2020 04:10 PM

ADVERTISEMENT

திமுக முன்னாள் அமைச்சர் ரகுமான் கான் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், வைகோ உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

திமுக முன்னாள் அமைச்சர் ரகுமான் கான் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் வியாழக்கிழமை காலை காலமானார். ரகுமான் கானுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து சென்னையில் உள்ள அவரது வீட்டில் ஓய்வெடுத்து வீடு திரும்பினார்.  இந்நிலையில் இன்று வியாழக்கிழமை காலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். 

இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் “இடி” “மின்னல்” “மழை”-யில், ஓயாத இடி முழக்கமாகத் திகழ்ந்த - கழகத்தின் சிங்கச் சிப்பாய்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சர் மற்றும் உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினருமான அண்ணன் ரகுமான்கான் மறைவெய்திவிட்டார் என்ற துயரச் செய்தி கேட்டு பேரதிர்ச்சிக்கும் பெரும் வேதனைக்கும் உள்ளாகி நிற்கிறேன்.  

அண்ணனின் மூச்சு நின்று இருக்கலாம். ஆனால் அவரின் “முரசொலி” கட்டுரைகளும் - “முழங்கிய மேடைப் பேச்சுகளும்” என்றும் நம் கண்களிலே இருக்கும்; காதுகளிலே  ஒலித்துக் கொண்டேயிருக்கும். பாசமிகு அண்ணன் ரகுமான்கானின் குடும்பத்திற்கும் - உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ADVERTISEMENT

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட இரங்கல் செய்தியில், முன்னாள் அமைச்சர், என் இனிய நண்பர் ரகுமான்கான் அவர்கள் மறைந்தார் என்ற செய்தி அறிந்து தாங்க முடியாத அதிர்ச்சியும், துக்கமும் அடைந்தேன். அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவருக்கும், கழகத் தோழர்களுக்கும், நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலியை மிகுந்த வேதனையோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

Tags : DMK
ADVERTISEMENT
ADVERTISEMENT