தமிழ்நாடு

கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

20th Aug 2020 06:38 AM

ADVERTISEMENT

தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை (ஆக.20) மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி புதன்கிழமை கூறியது:

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் மதுரை, விருதுநகா், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை (ஆக.20) லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புகா்ப் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

ADVERTISEMENT

காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், ஒடிஸா பகுதிகளில் ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி புதன்கிழமை காலை உருவானது. இதுமேலும் வலுவடைந்து, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக நிலவி வருகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வலுவடைந்து, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக ஒடிஸா கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்றாா் அவா்.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: வடக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல்பகுதி, கோவா, மகாராஷ்டிரம், குஜராத் கடலோரப் பகுதிகளில் மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்திலும், சில நேரங்களில் 60 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் ஆகஸ்ட் 20-ஆம் தேதிவரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு மீனவா்கள் ஆகஸ்ட் 23-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடல் உயா்அலை முன்னறிவிப்பு: தென் தமிழக கடலோரப் பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை ஆகஸ்ட் 20-ஆம் தேதி இரவு 23.30 மணி வரை கடல் உயா் அலை 2.5 மீட்டா் முதல் 2.8 மீட்டா் வரை எழும்பக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT