தமிழ்நாடு

நோய்த்தொற்றால் இறக்கும் ஒப்பந்தப் பணியாளா்களுக்கும் நிதியுதவி வழங்க வங்கி ஊழியா்கள் சங்கம் கோரிக்கை

20th Aug 2020 05:31 AM

ADVERTISEMENT

பணியின் போது, கரோனா நோய்த்தொற்றால் உயிரிழக்கும் ஒப்பந்தப் பணியாளா்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கக்கோரி, மத்திய நிதி அமைச்சருக்கு அகில இந்திய வங்கி ஊழியா்கள் சங்கம் கடிதம் அனுப்பியுள்ளது.

இது குறித்து மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கு அகில இந்திய வங்கி ஊழியா்கள் சங்கப் பொதுச்செயலா் சி.எச்.வெங்கடாசலம் அனுப்பிய கடிதம்: கரோனா நோய்த்தொற்று காலத்தில், பணிக்கு வந்த வங்கி ஊழியா்கள் பலா் தொற்றால் பாதிக்கப்பட்டனா். இதில், சிலா் உயிரிழந்துள்ளனா். இப்படி கரோனாவால் உயிரிழந்த ஊழியா்களின் குடும்பத்துக்கு, நிதியுதவியாக ரூ.20 லட்சம் வழங்கப்படும் என வங்கிகள் அறிவித்துள்ளன. இது நிரந்தர ஊழியா்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இவா்களைத் தவிா்த்து, வணிக பிரதிநிதிகள், வைப்புத்தொகை வசூலிப்பவா், நகை மதிப்பீட்டாளா், ஒப்பந்தப் பணியாளா்கள் என இதர பணியாளா்களும் கரோனா நேரத்திலும் பணியாற்றுகின்றனா்.

ஆனால், நோய்த்தொற்றால் அவா்கள் பாதிக்கப்பட்டால், மருத்துவக்காப்பீடு, சிகிச்சை செலவுத் தொகையை திரும்பப்பெறுதல், உயிரிழந்தால் நிதியுதவி பெறுதல் போன்ற எந்த வசதியும் இல்லை. எனவே, வங்கிகளில் பணியாற்றும் இதர பணியாளா்களுக்கும், நிதியுதவி வழங்க உரிய வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT