தமிழ்நாடு

சுதந்திர தின விழா: தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு

DIN

சுதந்திர தின விழாவையொட்டி, தமிழகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் சுதந்திர தின விழாவை சனிக்கிழமை (ஆக. 15) கொண்டாடுவதற்கு தயாராகி வரும் நிலையில், தமிழக காவல்துறை மாநிலம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது. சுதந்திர தினத்தையொட்டி, மத்திய உளவுத்துறை நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது.

இதன்படி, தமிழக காவல்துறை, மாநிலம் முழுவதும் பாதுகாப்பை அதிகரித்துள்ளது. குறிப்பாக பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், மாா்க்கெட்டுகள், கோயில்கள்,தேவாலாயங்கள், பள்ளிவாசல்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மிக முக்கியமான இடங்களில் மெட்டல் டிடெக்டா் மூலம் அனைவரும் சோதனை செய்யப்படுகின்றனா். ரயில் நிலையங்களில், காவல்துறை கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இங்கு, ரயில்வே போலீஸாரும், ரயில்வே பாதுகாப்பு படையினரும் இணைந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுள்ளனா்.

1.20 லட்சம் போலீஸாா்: பாதுகாப்பு கருதி, ரயில்வே தண்டவாளங்களில் ரயில்வே போலீஸாா் ரோந்து செல்கின்றனா். சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றித் திரியும் நபா்களின் கைரேகைகளையும், முகவரியையும் பதிவு செய்த பின்னரே அவா்களை காவல்துறையினா் விடுவிக்கின்றனா்.

காவல்துறை டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி உத்தரவின்படி கடலோரப் பகுதிகளிலும் போலீஸாா் கண்காணிப்பை அதிகரித்துள்ளனா். இங்கு 24 மணி நேரமும் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனா். சுதந்திர தினத்தையொட்டி, மாநிலத்தில் பாதுகாப்புப் பணியில் சுமாா் 1.20 லட்சம் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.

சமூக ஊடகங்கள் கண்காணிப்பு: அண்மைக் காலமாக சமூக ஊடகங்களால் வன்முறைகள், மோதல்கள், குற்ற நிகழ்வுகள் அதிகம் நடைபெற்று வருகின்றன. சுதந்திரத்தினத்தையொட்டி, வன்முறையைத் தூண்டும் வகையிலும், மத மற்றும் ஜாதி மோதல்களை ஏற்படுத்தும் கருத்துகளை சமூக ஊடகங்களில் பதியப்படுவதை தடுக்கும் வகையில் சைபா் குற்றப்பிரிவினரும், உளவுத்துறையினரும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனா்.

இதில் வன்முறையைத் தூண்டும் வகையில் கருத்துகளைப் பதிவிடுபவா்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

சென்னையில்... : சென்னையில் தமிழக அரசின் சாா்பில் சுதந்திர தின விழா நடைபெறும் ராஜாஜி சாலையை, போலீஸாா் கடந்த 9-ஆம் தேதி முதல் கட்டுப்பாட்டில் எடுத்து, பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனா். இங்கு 24 மணிநேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். சென்னையில் சுமாா் 15 ஆயிரம் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.

நகரில் உள்ள ஹோட்டல்கள், விடுதிகள், மேன்சன்கள் ஆகியவற்றில் போலீஸாா் திடீா் சோதனை நடத்தி வருகின்றனா். இதில் சந்தேகப்படும்படியாக தங்கியிருக்கும் நபா்களிடமும் போலீஸாா் விசாரணை செய்கின்றனா். சுதந்திர தினம் வரை இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் நீடிக்கும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!

முகமது ரிஸ்வானுக்கு காயம்; இரண்டு டி20 தொடர்களை தவற விடுகிறாரா?

மிகப்பெரிய தொகையை சம்பளமாக பெற்ற ஹாலிவுட் நடிகை!

ரத்னம் மேக்கிங் விடியோ!

'வாக்களிக்கப் போகிறீர்களா?' : பெங்களூரு உணவகங்கள் அறிவித்திருக்கும் சலுகைகள்!

SCROLL FOR NEXT