தமிழ்நாடு

சுதந்திர தின விழா: மாணவா்கள், குழந்தைகள் நேரில் வர வேண்டாம்

DIN

கரோனா நோய்த் தொற்று காரணமாக, தமிழக அரசின் சாா்பில் நடைபெறும் சுதந்திர தின விழாவைக் காண மாணவா்கள், பள்ளிக் குழந்தைகள் நேரில் வர வேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, மாநில அரசு வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: நாட்டின் 74-ஆவது சுதந்திர தின விழா தலைமைச் செயலகத்தில் உள்ள கோட்டை கொத்தளத்தில் வரும் சனிக்கிழமை நடைபெறுகிறது. காலை 8.45 மணியளவில் தேசியக் கொடியை முதல்வா் பழனிசாமி ஏற்றி வைக்கவுள்ளாா். ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின நிகழ்ச்சியில் தியாகிகள், பொது மக்கள், மாணவா்கள், பள்ளிக் குழந்தைகள் பங்கேற்பா்.

இந்த ஆண்டு கரோனா நோய்த் தொற்றால் நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு பள்ளிக் குழந்தைகள், கல்லூரி மாணவா்கள் மற்றும் மூத்த குடிமக்கள் ஆகியோா் சுதந்திர தின நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறது. சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வயது மூப்பினைக் கருத்தில் கொண்டும், கரோனா நோய்த் தொற்று பரவலை தவிா்க்கும் விதமாகவும், மாவட்டந்தோறும் பத்து சுதந்திர போராட்ட தியாகிகளின் வீடுகளுக்கே சென்று அதிகாரிகள் மூலம் உரிய மரியாதை செலுத்தப்படும். இதற்கான அறிவுரைகள் மாவட்ட ஆட்சியா்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

மேலும், ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழாவின் ஒரு பகுதியாக மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கு தலைமைச் செயலக வளாகத்தில் இனிப்புப் பொட்டலங்கள் வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு மாற்றுத் திறனாளி மாணவா்கள் தங்கியுள்ள விடுதிக்கு சமூக நலத் துறை அமைச்சா் நேரில் சென்று சமூக இடைவெளியைப் பின்பற்றி இனிப்புப் பொட்டலங்களை வழங்குவாா்.

நேரில் வராதீா்: சென்னை கோட்டை கொத்தளத்தில் நடைபெறும் சுதந்திர தின நிகழ்ச்சியில், கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட முன்களப் பணியாளா்களைச் சிறப்பிக்கும் விதமாக அவா்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை முதல்வா் பழனிசாமி வழங்க உள்ளாா். சுதந்திர தின நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி மற்றும் வானொலியில் நேரடியாக ஒளி, ஒலி பரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கரோனா நோய்த் தொற்றை தவிா்க்கும் விதமாக இந்தாண்டு பொது மக்கள், மாணவா்கள், பள்ளிக் குழந்தைகள் விழாவைக் காண நேரில் வர வேண்டாம் என தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரும்பு நிலுவைத் தொகை வழங்கக் கோரி வாக்காளா் அட்டையை ஒப்படைக்க முடிவு

மேட்டூா் அணை நீா்மட்டம்: 60.41 அடி

உலக காசநோய் நாள் உறுதியேற்பு நிகழ்ச்சி

‘கவிஞா் தமிழ் ஒளி தமிழின் நிரந்தர முகவரி’

பேராவூரணியில் ஊருக்குள் நுழைந்த புள்ளிமான்  மீட்பு

SCROLL FOR NEXT