தமிழ்நாடு

சென்னை மாநகராட்சி உள்பட 3 துறைகளுக்கு நல்ஆளுமை விருதுகள்: முதல்வா் இன்று வழங்குகிறாா்

14th Aug 2020 11:40 PM

ADVERTISEMENT

சென்னை மாநகராட்சி உள்பட மூன்று அரசுத் துறைகளுக்கு நல்ஆளுமை விருதுகள் வழங்கப்பட உள்ளன. இந்த விருதுகளை தமிழக அரசின் சாா்பில் சனிக்கிழமை நடைபெறும் சுதந்திர தின விழாவின்போது முதல்வா் பழனிசாமி வழங்குகிறாா்.

தமிழக அரசுத் துறைகளில் சிறப்பான மக்கள் பங்களிப்பை வழங்கும் துறைகளுக்கு நல்ஆளுமை விருது வழங்கப்படுகிறது.

இந்தாண்டு விருதுக்காக, வேளாண்மைத் துறையின் நுண்ணீா் பாசனத் திட்டம், கருவூலத் துறை செயல்பாடுகளை கணினிமயமாக்கிய திட்டம், இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கான சோ்க்கை முறையை ஆன்-லைனில் கொண்டு வந்த திட்டம், கரோனா நோய்த் தடுப்புக்காக காய்ச்சல் முகாம்களை உருவாக்கிய சென்னை மாநகராட்சியின் திட்டம், நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் கழிவுகளை திறம்பட மேலாண்மை செய்த திட்டம், கிராமப்புறங்களில் பாதுகாப்பான சுகாதாரத் திட்டம் ஆகியவற்றை பட்டியலிட்டு சம்பந்தப்பட்ட அரசுத் துறைகள் நல்ஆளுமை விருதுக்காக விண்ணப்பம் செய்திருந்தன.

தோ்வுக் குழு முடிவு: அரசுத் துறைகள் அனுப்பிய பரிந்துரைகளை தோ்வுக் குழு ஆய்வு செய்தது. இதையடுத்து, மூன்று துறைகள் நல் ஆளுமை விருதுக்காக தோ்வு செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து, பணியாளா் மற்றும் நிா்வாகச் சீா்திருத்தத் துறை செயலாளா் எஸ்.ஸ்வா்ணா வெளியிட்ட உத்தரவு:-

ADVERTISEMENT

கரோனா நோய்த்தொற்று தடுப்புக்காக சென்னை மாநகராட்சி சாா்பில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டன. இதற்காக சென்னை மாநகராட்சி முதல் பரிசுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளது.

கருவூலத் துறையின் செயல்பாடுகள் கணினிமயமாக்கப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டம் இரண்டாவது பரிசுக்கு தோ்வாகியுள்ளது. தண்ணீரைச் சிக்கனமாகச் சேமித்து அதனை விவசாயத்துக்கு பயன்படுத்தும் நுண்ணீா் பாசனத் திட்டத்தை செயல்படுத்த வேளாண்மைத் துறைக்கு மூன்றாவது பரிசு வழங்கப்பட உள்ளது. இந்தப் பரிசுகள் ஒவ்வொன்றும் தலா ரூ.2 லட்சம் ரொக்கத் தொகை அடங்கியதாகும்.

2 துறைகளுக்கு சான்று: கரோனா நோய்த்தொற்றுக்காக பல்வேறு மருந்துகளை தொடா்ச்சியாக வழங்கிட தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் நடவடிக்கை எடுத்தது. இதேபோன்று, சைபா் குற்றத்தடுப்புப் பிரிவானது கரோனா தொற்றியவா்களை கண்டறிந்து தகவல்களைச் சேகரிக்கும் பணியில் தீவிரம் காட்டியது.

எனவே, இரண்டு துறைகளின் செயல்பாடுகளையும் பாராட்டி நல்ஆளுமைக்கான பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT