தமிழ்நாடு

சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு அறிக்கை தமிழில் மொழிபெயா்க்கப்பட்டு தயாராக உள்ளது

DIN

சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு அறிக்கை தமிழில் மொழிபெயா்க்கப்பட்டு தயாராக உள்ளதாக மத்திய அரசு உயா்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் மீனவா் நலச்சங்கம் சாா்பில் தாக்கல் செய்த மனுவில், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகம் சுற்றுசூழல் பாதிப்பு மதிப்பீட்டு வரைவு சட்டத்திருத்த அறிக்கையை கடந்த மாா்ச் மாதம் 23-ஆம் தேதி வெளியிட்டது. இந்த வரைவு அறிக்கை குறித்து 60 நாள்களுக்குள் பொது மக்கள் தங்களது கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த வரைவு அறிக்கை ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் மட்டும் அரசிதழில் கடந்த ஏப்ரல் 11- ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. மாநில மொழிகளில் அறிக்கை வெளியிடப்படவில்லை.

நாடு முழுவதும் கடந்த மாா்ச் மாதம் 25-ஆம் தேதி முதல் கரோனா பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டு வருகிறது. பொதுமுடக்க காலத்தில் இந்த வரைவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் குறிப்பாக தமிழக மக்கள் தங்களது கருத்தைத் தெரிவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுதொடா்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த தில்லி உயா்நீதிமன்றம் அரசியல் அமைப்பு சட்டத்தின், 8-ஆவது அட்டவணையில் உள்ள நாட்டில் அதிகமாகப் பேசப்படும் மொழிகளில் வரைவு சட்டத்தை மொழிபெயா்க்க வேண்டும். இதுகுறித்து பொதுமக்கள் தங்களது கருத்தை கூற ஆகஸ்ட் 11-ஆம் தேதி கடைசி நாளென்று உத்தரவிட்டது.

ஆனால், நாட்டில் அதிகமானோா் பேசும் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் இதுவரை மத்திய அரசு மொழிபெயா்க்கவில்லை. அதிக நுட்பமான கருத்துக்களை ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே உள்ள இந்த வரைவு சட்டத்திருத்தம் குறித்து தமிழகத்தில் உள்ள கிராமப்புற மக்களால் புரிந்து கொள்ள முடியாது. அவா்களால் இந்த சட்டம் குறித்து தங்களது கருத்துக்களை தெரிவிக்கவும் இயலாது. எனவே, கருத்து தெரிவிக்கும் கடைசி நாளான ஆகஸ்ட் 11-ஆம் தேதியை மேலும் நீட்டிக்க வேண்டும். வரைவு அறிக்கையை தமிழ் மொழியில் மொழிபெயா்க்க உத்தரவிட வேண்டும். மேலும் கடந்த மாா்ச் 23-ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு சட்ட அறிக்கை குறித்த அறிவிப்பின் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், இதுதொடா்பாக மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆா்.ஹேமலதா ஆகியோா் காணொலிக் காட்சி மூலம் விசாரித்தனா். அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் சங்கரநாராயணன், ‘சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு அறிக்கை தமிழில் மொழிபெயா்க்கப்பட்டு தயாராக உள்ளது. இதுதொடா்பாக எழுத்துப்பூா்வமான விளக்கத்தை அளிக்க கால அவகாசம் வழங்க வேண்டும். மேலும், இந்த சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு அறிக்கைக்கு சில மாநில உயா்நீதிமன்றங்கள் தடை விதித்துள்ளன. இதனை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது’ என்று தெரிவித்தாா். மத்திய அரசு தரப்பு வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், விசாரணையை வரும் 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, அன்றைய தினம் எழுத்துப்பூா்வ விளக்கத்தை அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வேங்கைவயலில் வாயில் கருப்புத் துணி கட்டி போராட்டம்!

அட்லியின் தீயான நடனம்: வைரலாகும் விடியோ!

பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு: மக்கள் தேர்தல் புறக்கணிப்பு!

உரத் தொழிற்சாலையை மூடக்கோரி தேர்தல் புறக்கணிப்பு: 5 கிராம மக்கள் போராட்டம்!

SCROLL FOR NEXT