மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம் பகுதி அம்மன் கோவில்களில் ஆடி மாத கடைசி வெள்ளி உற்சவத்தை முன்னிட்டு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.முக்கியக் கோவில்கள் அடைக்கப்பட்டிருந்ததால் பக்தர்கள் வெளியிலேயே நின்று சாமி தரிசனம் செய்தனர்.
ஆடி மாதம் பிறந்தாளே அம்மன் கோவில்கள் களைக்கட்டிவிடும். முளைப்பாரி, கஞ்சிக்கலயம், ஊஞ்சல் உற்சவம், மஞ்சள் நீராட்டு என பலவகை வழிபாடுகள் அம்மன் கோவில்களில் நடைபெறும். அதிலும் ஆடி மாதத்தி்ல் வரும் வெள்ளிக்கிழமைகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவையாகும். இந்தக் கிழமைகளில் அம்மன் கோவில்களில் கூட்டம் நிரம்பி வழியும். ஆனால் இந்தாண்டு ஆடிமாதம் கரோனா தொற்று பிரச்னையால் களைகட்டவில்லை. முக்கிய அம்மன் கோவில்கள் மூடப்பட்டுள்ளதால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றமடைந்தனர்.
ஆடி மாதத்தின் கடைசி வெள்ளியை முன்னிட்டு மானாமதுரை நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிறிய அம்மன் கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர். மானாமதுரை தயாபுரம் மாரியம்மன் கோவிலில் மூலவர் முத்துமாரியம்மனுக்கு அபிஷேகம், ஆராதனைகள் நடத்தி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். அதன்பின் சிறப்பு பூஜைகள், தீபாரதனைகள் நடந்தது. ஏராளமான பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் கோவிலுக்கு வந்து மாவிளக்கு பூஜை நடத்தியும் எலுமிச்சை பழத்தால் விளக்கேற்றியும் மாரியம்மனை தரிசனம் செய்தனர்.
ஊர் பெரிய கோவிலான ஆனந்தவல்லி அம்மன் கோவில் மூடப்பட்டுள்ளதால் பெண்கள் கோவிலுக்கு வெளியே விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர். மேலும் சுந்தரபுரம் வீதியில் உள்ள சுந்தரவிநாயகர் கோவில், ரயில் நிலையம் எதிரேயுள்ள பூர்ணசக்கர விநாயகர் கோவில், உச்சிமாகாளியம்மன் கோவில், நம்பிநாகம்மாள் கோவில் உள்பட மானாமதுரை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிறிய கோவில்களில் ஆடி கடைசி வெள்ளி வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.
திருப்புவனம் அருகே லாடனேந்தலில் உள்ள முத்துமாரியம்மன் கோவில், புதூர் மாரியம்மன் கோவிலிலும் ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு பக்தர்கள் குவிந்தனர். திருப்புவனம் அருகே மடப்புரம் காளி கோவில் மூடப்பட்டிருந்ததால் பக்தர்கள் கோவிலுக்கு வெளியே விளக்கேற்றி பூஜைகள் நடத்தி காளியை தரிசனம் செய்தனர். இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் உள்ள பிரசித்தம் பெற்ற முத்துமாரியம்மன் கோவில் அடைக்கப்பட்டுள்ளதால் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வெளியே நின்று மாரியம்மனை தரிசித்தனர்.