தமிழ்நாடு

பொதுப் போக்குவரத்தைத் துவங்க வேண்டும்: நுகர்வோர் அமைப்பு கோரிக்கை

11th Aug 2020 06:03 PM

ADVERTISEMENT

 

பொது போக்குவரத்தைத் தமிழக அரசு துவங்கிட வேண்டும் என திருவாரூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு சேவை அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. 

இது தொடர்பாக அமைப்பின் தலைவர் இஎம்ஏ.ரஹீம் மற்றும் செயலாளர் தெ.கிருஷ்ணவேணி முதல்வருக்கு விடுத்துள்ள கோரிக்கையில் தெரிவித்துள்ளதாவது, 
 
கரோனா தொற்றின் காரணமாக பொது போக்குவரத்து தற்போது தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் பள்ளி, கல்லூரிகளைத் தவிர மற்ற அனைத்துப் பணிகளும் தொடர்ந்து நடைபெற அரசு அனுமதித்துள்ளது. வணிக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் தினசரி வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அதேபோல கட்டிடத் தொழிலாளர்கள், மின்சார சம்பந்தமான வேலை செய்பவர்கள், பிளம்பர்கள் போன்ற அமைப்பு சாராத் தொழிலாளர்களும் ஒரு இடத்திலிருந்து வேறொரு இடத்திற்குச் சென்று வேலை செய்ய வேண்டிய நிலை உள்ளது. 

இவர்கள் அனைவரிடமும் இருசக்கர வாகன வசதி என்பது கிடையாது. அவ்வாறு ஒருசிலரிடம் இருசக்கர வாகனம் இருந்தாலும், அதிக செலவு செய்து பெட்ரோல்  போடக் கூடிய வசதி நிச்சயமாக இல்லை. குடும்பத்தின் ஏழ்மை நிலையைக் கருத்தில் கொண்டு கட்டட வேலைக்குச் செல்லும் ஏழை இளம் பெண்களும், வணிக நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களில் வேலை பார்க்கும் பெண்களும் வேலைக்குச் செல்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர்.

ADVERTISEMENT

பெரும்பாலான கிராமப் பெண்கள் நகரப்பகுதியில் தான் வேலை செய்து வருகின்றனர். இருசக்கர வாகன வசதி இல்லாத காரணத்தினாலும், பொது போக்குவரத்தும் இல்லாத காரணத்தினாலும் தாங்கள் வேலை செய்யும் இடத்திற்குச் செல்ல முடியாத காரணத்தினால் தினசரி குடும்பம் நடத்துவதற்கேச் சிரமப்பட வேண்டிய நிலையில் பல குடும்பத்தினர் உள்ளனர். 

மேலும் நியாயமான காரணங்களுக்காக வெளியூர் செல்ல வேண்டிய பொதுமக்களும் அதிக செலவு செய்து வாடகைக் கார் எடுத்துச் செல்ல வேண்டிய கட்டாய நிலையில் உள்ளனர். கடந்த காலங்களில் இவர்கள் அனைவரும் பொது போக்குவரத்தை நம்பியே குறைந்த  செலவு செய்து பொதுப் போக்குவரத்தில் சென்று வந்து, தங்கள் தொழிலைச் செய்துள்ளனர். தற்போது பொதுப்போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தினால், அதிக செலவு செய்து இருசக்கர வாகனத்தில் செல்ல வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். 

எனவே இதுபோன்ற தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களின் நிலையைக் கருத்தில் கொண்டு, முன்னர் மண்டலங்களுக்கு இடையே இயக்கப்பட்டது போன்று பொது போக்குவரத்து வசதியினை மீண்டும் துவக்கிட முதலமைச்சர் உத்தரவிட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT