தமிழ்நாடு

தமிழகத்தில் கட்டுக்குள் கரோனா: முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி

11th Aug 2020 05:34 AM

ADVERTISEMENT

 

விழுப்புரம்: தமிழகத்தில் மாநில அரசு மேற்கொண்டு வரும் தீவிர தடுப்புப் பணிகளால், கரோனா கட்டுக்குள் உள்ளதாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.33.31 கோடியில் நலத் திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, அதன் பிறகு கரோனா தடுப்புப் பணிகள், வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு நடத்தினார். 

பின்னர், செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: உலகில் வல்லரசு நாடுகளே கரோனா பெருந்தொற்று பாதிப்பை எதிர்கொள்ளத் திணறி வரும் சூழலில், தமிழகத்தில் நோய்த் தடுப்புப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கரோனாவுக்கு தரமான சிகிச்சை அளிக்க அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 

ADVERTISEMENT

கரோனா தொற்று பாதித்த பகுதிகளில் நடமாடும் மருத்துவ வாகனங்கள் மூலம் நேரடி பரிசோதனை, சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. கரோனா சிகிச்சைக்குத் தேவையான உபகரணங்கள் போதிய அளவில் கையிருப்பில் உள்ளன. 

கரோனாவுக்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகளைக் காட்டிலும், அரசு மருத்துவமனைகளில் மேம்படுத்தப்பட்ட வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளில் 4.50 கோடி பாதுகாப்பு முகக் கவசங்கள் வழங்கப்படுகின்றன. இவை ஊராட்சிப் பகுதிகளுக்கும் விரைவில் வழங்கப்படும். 

இதேபோல, கரோனா கடனுதவித் திட்டத்தின் கீழ், 2 லட்சத்து 19 ஆயிரத்து 217 சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.7029 கோடி வழங்கப்பட்டுள்ளது. இது இந்திய அளவில் 10 சதவீதமாகும்.

தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்துக்காக 28 லட்சம் மெட்ரிக் டன் நெல் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. தமிழகத்தில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 14ஆயிரம் ஏரிகள், ஊராட்சிக் கட்டுப்பாட்டில் உள்ள 26 ஆயிரம் ஏரிகள் என மொத்தம் 40 ஆயிரம் ஏரிகளில் குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ரூ.1000 கோடியில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றின் மூலம், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மகளிர் குழுவினருக்கு அதிகளவில் கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

மிகப் பெரிய விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, கள்ளக்குறிச்சி மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்று அமைச்சர் சி.வி.சண்முகம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் வலியுறுத்திய கோரிக்கையை ஏற்று, கள்ளக்குறிச்சி மாவட்டத்தை அறிவித்து, தொடங்கியும் வைத்து, நிதியும் ஒதுக்கினேன். மாவட்டம் பிரிக்கப்பட்ட 6 மாதங்களிலேயே ரூ.382 கோடி மதிப்பீட்டில் புதிய மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் விபத்து, அவசர சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் ரூ.14 கோடி மதிப்பீட்டில் மகப்பேறு மருத்துவ மையம் திறக்கப்படவுள்ளது. 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதல்வரின் சிறப்பு குறை தீர்ப்பு முகாம் மூலம் 54,137 மனுக்கள் பெறப்பட்டு, 15,423 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளன. கோமுகி, கெடிலம், மணிமுக்தா ஆகிய நதிகளில் 9 தடுப்பணைகளை கட்ட ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக சுற்றுச்சாலை அமைக்க ரூ.110 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல, விருத்தாசலம்}உளுந்தூர்பேட்டை சாலையை இருவழிச் சாலையாக மாற்ற ரு.130 கோடி ஒதுக்கீடு செய்து, ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது.

கல்வராயன்மலையில் வரும் உபரி நீரில்தான் நீர் மேலாண்மைத் திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்காக குழு அமைத்து, விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் கைக்கான் வளைவுத் திட்டம்  திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது என்றார் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.

நிகழ்ச்சியில் மாநில சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் குமரகுரு, பிரபு, மாவட்ட ஆட்சியர் கிரண் குராலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT