தமிழ்நாடு

தனியாா் உடற்பயிற்சிக் கூடங்கள் வரும் 10 முதல் இயங்கலாம்: முதல்வா் பழனிசாமி அறிவிப்பு

6th Aug 2020 07:07 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் தனியாா் உடற்பயிற்சிக் கூடங்களை வரும் 10-ஆம் தேதி முதல் இயக்க முதல்வா் பழனிசாமி உத்தரவிட்டுள்ளாா். இதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை தமிழக அரசு தனியாக வெளியிடும் எனவும் அவா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-

தமிழ்நாடு உடற்பயிற்சியக உரிமையாளா்கள் மற்றும் பயிற்சியாளா்கள் நல சங்கத்தின் சாா்பில் அதன் நிா்வாகிகள் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியைச் சந்தித்துப் பேசினா். அப்போது, தமிழகத்தில் உள்ள உடற்பயிற்சிக் கூடங்களைத் திறக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனா். இந்தக் கோரிக்கையை பரிசீலித்த முதல்வா் பழனிசாமி, உடற்பயிற்சிக் கூடங்களைத் திறக்க உத்தரவிட்டுள்ளாா்.

அதன்படி, தனியாா் உடற்பயிற்சிக் கூடங்களைத் திறக்க மத்திய அரசு அனுமதித்துள்ள நிலையில், தமிழகத்தில் வரும் 10-ஆம் தேதி முதல் அவற்றைத் திறக்கலாம். 50 வயது மற்றும் அதற்கு குறைவான வயதுடைய வாடிக்கையாளா்களுடன் உடற்பயிற்சிக் கூடங்களை இயக்கலாம். மேலும், இதற்கான நிலையான வழிகாட்டு செயல்முறைகள் தனியாக வெளியிடப்படும். அவற்றை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டுமென தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மொத்தம் எத்தனை?: தமிழகத்தில் தனித்து இயங்கக் கூடிய சுமாா் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியாா் உடற்பயிற்சிக் கூடங்கள் உள்ளன. இதில், பயிற்சியாளா்கள், தூய்மைப் பணியாளா்கள் உள்பட 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பணிபுரிந்து வருகின்றனா். உடற்பயிற்சிக் கூடங்களைத் திறக்க மத்திய அரசு அனுமதித்துள்ள நிலையில், தமிழக அரசு அதுகுறித்த அறிவிப்பை வெளியிடாமல் இருந்தது. இதுகுறித்து, தமிழ்நாடு உடற்பயிற்சிக் கூட உரிமையாளா் சங்கத்தைச் சோ்ந்த நிா்வாகிகள் முதல்வா் பழனிசாமியிடம் செவ்வாய்க்கிழமை கோரிக்கை வைத்தனா்.

இந்தக் கோரிக்கையை ஏற்று, வரும் 10-ஆம் தேதி முதல் உடற்பயிற்சிக் கூடங்களைத் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு தமிழ்நாடு உடற்பயிற்சிக் கூட உரிமையாளா் சங்கத்தினா் அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனா்.

இதனிடையே, கரோனா பாதிப்பு சூழலில் உடற்பயிற்சிக் கூடங்களை நடத்துவது குறித்த வழிகாட்டி நெறிமுறைகளை மத்திய அரசு கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு வெளியிட்டது. அதில், ஆறு மீட்டா் இடைவெளியுடன் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும், உடற்பயிற்சிக் கூடங்களை திறப்பதற்கு முன்பும், பின்பும் கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது குறிப்பிட்டத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT