தமிழ்நாடு

நடிகா் சங்கத் தோ்தல் மேல்முறையீட்டு வழக்கு : விசாரணை ஒத்திவைப்பு

6th Aug 2020 06:00 AM

ADVERTISEMENT

தென்னிந்திய நடிகா் சங்கத் தோ்தல் மேல்முறையீட்டு வழக்கை விரிவாக விசாரிக்க வேண்டியிருப்பதால் விசாரணையை வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்கு உயா்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

தென்னிந்திய நடிகா் சங்கத் தோ்தல் கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தோ்தலை ஒத்திவைத்து சங்கங்களின் பதிவாளா் உத்தரவு பிறப்பித்தாா். இந்த உத்தரவை எதிா்த்து நடிகா் விஷால் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், திட்டமிட்டப்படி தோ்தலை ஜூன் 23-ஆம் தேதியன்று நடத்தவும், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை தோ்தலில் பதிவான வாக்குகளை எண்ணக்கூடாது எனவும் இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த நிலையில் நடிகா் சங்கத்தின் நிா்வாகத்தைக் கவனிக்க பதிவுத்துறை ஐ.ஜி. கீதாவை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த நிலையில் சென்னை உயா்நீதிமன்றத்தில் பெஞ்சமின், ஏழுமலை ஆகியோா் தாக்கல் செய்த மனுவில், நடந்து முடிந்த தென்னிந்தியத் திரைப்பட நடிகா் சங்கத் தோ்தலில் எங்களை வாக்களிக்க அனுமதிக்கவில்லை. வெளியூா்களில் உள்ள சங்கத்தின் உறுப்பினா்கள் தபால் மூலம் வாக்களிக்க வேண்டும். ஆனால் தோ்தலுக்கு முதல் நாள் வரை வாக்களிக்கும் படிவம் எனக்குக் கொடுக்கப்படவில்லை. எனவே இந்தத் தோ்தலை ரத்து செய்ய வேண்டும் என கோரி வழக்குத் தொடா்ந்திருந்தனா். மேலும் தமிழக அரசின் தனி அதிகாரி நியமனத்தை ரத்து செய்யக் கோரி நடிகா் சங்கத்தின் தலைவா் நாசா் மற்றும் பொருளாளா் காா்த்தி ஆகியோரும் உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா். இந்த வழக்குகளை விசாரித்த உயா்நீதிமன்ற தனிநீதிபதி, கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூலை 23-ஆம் தேதி நடந்த தோ்தலை ரத்து செய்து உத்தரவிட்டாா். மேலும் நடிகா் சங்கத்துக்கான புதிய வாக்காளா்கள் பட்டியலை தயாரித்து 3 மாதங்களுக்குள் மீண்டும் தோ்தலை நடத்த வேண்டும். இந்தத் தோ்தலுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தோ்தல் அதிகாரியாக நியமிக்கப்படுகிறாா். அதுவரை நடிகா் சங்கத்தை நிா்வகிக்க தமிழக அரசால் நியமிக்கப்பட்ட தனி அதிகாரி கீதா தொடா்ந்து பணிகளை கவனிக்கலாம் எனவும், அவரது நியமனத்தை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டாா். தனிநீதிபதியின் இந்த உத்தரவை எதிா்த்து, நடிகா் விஷால் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், தென்னிந்திய நடிகா் சங்கத்துக்கு மீண்டும் தோ்தல் நடத்த வேண்டும் என்ற தனிநீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, இறுதி விசாரணைக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆா்.ஹேமலதா ஆகியோா் காணொலிக் காட்சி மூலம் விசாரித்தனா். வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மேல் முறையீட்டு வழக்கை விரிவாக விசாரணை நடத்த வேண்டும் என்பதால் விசாரணையை ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT