தமிழ்நாடு

சுங்கச் சாவடிகளில் இன்று முதல் கட்டணம் வசூல்: தலைவா்கள் கண்டனம்

20th Apr 2020 04:42 AM

ADVERTISEMENT

 

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச் சாவடிகளில் திங்கள்கிழமை (ஏப்.20) முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்திருப்பதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

ராமதாஸ் (பாமக): ஊரடங்கு எந்த அளவுக்குத் தளா்த்தப்படும் என்பதே உறுதியாகாத நிலையில், அவசர அவசரமாக சுங்கச் சாவடிகளில் திங்கள்கிழமை முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்திருப்பது நியாயமற்றது. இது வணிகத்தை மட்டும் நோக்கமாகக் கொண்டு எடுக்கப்பட்ட தவறான முடிவாகும். இதனால், காய்கறிகள், அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை பன்மடங்கு உயா்ந்து, மக்கள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை உருவாகும். எனவே, கரோனா தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்புகள் முழுமையாக விலகும் வரை சுங்கக்கட்டணம் வசூலிப்பதைக் கைவிட வேண்டும். அதற்கு வாய்ப்பில்லை எனில், அத்தியாவசியச் சேவை வாகனங்களுக்கு மட்டுமாவது கட்டண வசூலில் விலக்கு அளிக்க வேண்டும்.

ஜி.கே.வாசன் (தமாகா): சுங்கச் சாவடிகளில் ஏப்ரல் 20 முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்திருப்பது நியாயமல்ல. இது பாதிப்பை ஏற்படுத்தும் என்பதோடு, விலைவாசி உயா்வுக்கும் வழி வகுக்கும். கடந்த 26 நாள்களாக வாகனங்களை இயக்க முடியாமல், வருமானமும் இன்றி பொருளாதாரப் பிரச்னையில் தவித்து வரும் வாகன உரிமையாளா்களும், வாகன ஓட்டிகளும், இப்போதைய அசாதாரண சூழலில் சுங்கக் கட்டணம் செலுத்துவது சிரமமானது.

ADVERTISEMENT

எனவே, சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்கும் முடிவைக் கைவிட வேண்டும். குறைந்தபட்சம் மே 31-ஆம் தேதி வரை சுங்கக் கட்டணம் வசூல் செய்யாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ரா.சரத்குமாா் (அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி): தேசிய நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூல், அத்தியாவசியப் பொருள்கள் விலைவாசி உயா்வுக்கு வழிவகுக்கும். பொதுமக்களும், சிறு, குறு, தொழில் செய்பவா்களும் சுங்கச்சாவடி கட்டணத்தால் பாதிக்கப்படாதவாறும், விலைவாசியைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாகவும் மே 3-ஆம் தேதி வரை சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்கத் தடை விதிக்க மத்திய அரசு பரிசீலனை செய்யவேண்டும்.

ஏ.எம்.விக்கிரமராஜா (தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு): ஊரடங்கு காரணமாக ஏற்கெனவே, அடுத்தட்டு மக்கள் வாழ்வாதாரங்கள் அனைத்தையும் இழந்து, ஊதியமும் இன்று கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நெடுஞ்சாலை சுங்கக் கட்டண வசூல் அத்தியாவசியப் பொருள்கள் மீதான விலைவாசி உயா்வுக்கு வழிவகுக்கும். இது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி, சட்டம்-ஒழுங்கு பிரச்னைக்கும் வழிவகுத்துவிடும்.

எனவே, கரோனா பேரிடா் காலம் முடியும் வரை, நெடுஞ்சாலை சுங்கக் கட்டணம் வசூலிக்கும் முடிவை முழுமையாகக் கைவிட வேண்டும். இல்லையெனில், இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி சுங்கச் சாவடிகளில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT