தமிழ்நாடு

முகக்கவசங்களை சுத்திகரிக்கும் எந்திரம்: மதுரை இளைஞரின் கண்டுபிடிப்பு

20th Apr 2020 03:04 PM | உமாமகேசுவரன்

ADVERTISEMENT

 

முகக்கவசங்களை சுத்திகரிக்கும் எந்திரத்தை மதுரையைச் சேர்ந்த சுந்தரேஸ்வரன் என்ற இளைஞர் கண்டுபிடித்துள்ளார். 

கரோனா வைரஸ் தொற்றால் உலகம் 210க்கும் மேற்பட்ட நாடுகளில் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட மரணங்கள் நிகழ்ந்துள்ளன. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது. இதில் தமிழகம் நான்காவது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் மட்டும் 1400க்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள் உள்ளனர்.  

இந்நிலையில் கரோனா வைரஸ் தொற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளப் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணியுமாறு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி திரும்பிய திசையெல்லாம் முகக்கவசம் அணிந்த மனிதர்களாகவே வலம் வரும் நிலை உள்ளது. மேலும், முகக்கவசம் அணியாமல் வெளியே வருபவர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை விடுப்பதோடு  பல மாவட்டங்களில் அபராதமும் விதிக்கப்படுகிறது. 

ADVERTISEMENT

கரோனா தொற்றிலிருந்து முகக்கவசம் அணிவது ஒருபுறம் இருக்க, மற்றொரு புறம் முகக் கவசங்களின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. பல பகுதிகளில் முகக்கவசங்கள் தற்போது கிடைப்பது இல்லை என்ற சூழல் உருவாகியுள்ளது. சாதாரணமாக ஒரு முறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் முகக்கவசம் தற்போது ரூ.20 வரையிலும் விற்கப்படுகிறது. மேலும் கரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கும் என் 95 முகக்கவசம் தற்போது 500 ரூபாயைத் தாண்டி விட்டது. ஆனாலும் இது அனைவருக்கும் கிடைப்பதில்லை. 

முகக்கவசங்கள் கிடைக்காதபோது பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள என்ன செய்ய முடியும் என்ற சிந்தனை ஒருவரை முகக் கவசங்களைச்  சுத்திகரிக்கும் எந்திரத்தைக் கண்டுபிடிக்கத் தூண்டியுள்ளது. அதன்படி முக கவசங்களைச் சுத்திகரிக்கும் இயந்திரத்தைக் கண்டுபிடித்துள்ளார் மதுரை ஐயர் பங்களா பகுதியைச் சேர்ந்த சுந்தரேசன். 

மெக்கானிக்கல் என்ஜினியரிங் பட்டம் பெற்று மருத்துவ உபகரணம் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள சுந்தரேசனை, தற்போது பொதுமக்கள் முகக்கவசத்திற்கு அலையும் சூழல் ஏதாவது செய்யும்படி தூண்டியுள்ளது. இதையடுத்து வெளிநாட்டில் உள்ள தனது நண்பர்களுடன் ஆலோசித்த போது வெளிநாடுகளில் காய்கறிகள் பழங்கள் உள்ளிட்டவற்றை சி ரே கதிர்கள் மூலம் சுத்திகரிக்கும் முறை பற்றித் தெரிய வந்துள்ளது. இதையடுத்து ஒரு மாத கடும் உழைப்பிற்குப் பின்னர் முக கவசங்களைச் சுத்திகரிக்கும் எந்திரத்தை சுந்தரேஸ்வரன் கண்டுபிடித்துள்ளார். 

தனது கண்டுபிடிப்பு குறித்து சுந்தரேஸ்வரன் கூறியது

கரோனா வைரஸ் தொற்றால் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒருவருக்கு ரூ.10 என்று வைத்துக் கொண்டாலும் ஒரு குடும்பத்தில் நான்கு பேருக்குத் தினசரி 40 ரூபாய் என்றால் ஒரு மாதத்திற்கு முகக்கவசம் வாங்குவதற்கு சில ஆயிரங்கள் தேவைப்படும். மேலும், அடுத்த நான்கு மாதங்களுக்கு முகக் கவசம் அணிவது கட்டாயம் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே பொது மக்களுக்கு உதவ ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. 

இது தொடர்பாக எனது நண்பர்களிடம் ஆலோசித்த போது தென் கொரியா சிங்கப்பூர் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பிரபலமாக உள்ள சி ரே தொழில்நுட்பம் பற்றித் தெரியவந்தது. அந்நாடுகளில் பழங்கள் காய்கறிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை சி கதிர்கள் மூலம் கிருமி நீக்கம் செய்து பயன்படுத்துவது தெரியவந்தது. இந்த தொழில்நுட்பத்தை நமக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்து, இதில் ஒரு முறை பயன்படுத்திவிட்டுத் தூக்கி எறியும் முகக்கவசம், துணியால் பயன்படுத்தும் முகக் கவசம் வரை அனைத்து விதமான முக கவசங்களையும் சி ரே கதிர் வீச்சுகள் மூலம் கிருமி நீக்கம் செய்து பயன்படுத்த முடியும். இதற்கு இசட் பாக்ஸ் என்ற கருவியை வடிவமைத்துள்ளேன். அந்த கருவிக்குள் முக கவசங்களை வைத்துவிட்டுக் குறைந்தது 3 நிமிடம் முதல் 30 நிமிடங்கள்  வரை கருவியை ஆன் செய்து கிருமி நீக்கம் செய்து கொள்ளலாம். 

இதில் சி ரே என்ற வகையான கதிர்கள் பயன்படுத்தப்படுகிறது. இந்த கருவியின் மூலம் கிருமி நீக்கம் செய்யப்படுவது ஆய்வக பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கருவி தற்போது அடக்க விலையாக ரூ 5,500 என்ற அளவில் உள்ளது. இந்த கருவியை ஒருமுறை வாங்கி வைத்துக்கொண்டால் அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள், பலர் பணிபுரியும் தொழில் நிறுவனங்கள், வணிக வளாகங்கள் எனப் பலவகையான பயன்பாட்டிற்கு நாம் பயன்படுத்த முடியும். 

இதனால் பல்லாயிரக் கணக்கான ரூபாய் மிச்சப்படுத்த முடியும். தற்போது இந்த கருவி மத்திய, மாநில அரசுகளுக்கு அங்கீகாரத்திற்காக அனுப்பப்பட்டுள்ளது. அரசு உதவி செய்யும்பட்சத்தில் இந்த கருவியை மிகக் குறைந்த விலைக்குத் தயாரித்து அளிக்க முடியும். இந்தியாவில் இந்த தொழில்நுட்பத்தை வேறு எவரும் இதுவரை பயன்படுத்தவில்லை. முதன்முறையாக நான் இதைக் கண்டுபிடித்துள்ளேன் என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT