கரோனா நோய்த் தடுப்பில் இன்று வரை எடுக்கப்பட்ட பணிகள், மருந்து, மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் ஆகியவை குறித்த வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும் என அமமுக பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் கரோனா தடுப்புப் பணிகளில் தொடக்கம் முதல் சரியான ஒருங்கிணைப்பு இல்லாமல் குழப்பம் நிலவி வந்த நிலையில், இப்போது முதல்வா் முதல் அதிகாரிகள் வரை முன்னுக்குப் பின் முரணான தகவல்களை வெளியிட்டு வருவது, மக்களிடையே சந்தேகங்களையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
கரோனா நோய் தமிழகத்தில் பிப்ரவரி மாதத்திலேயே வந்துவிட்டதாக ஏப்ரல் 7-ஆம் தேதி கூறிய சுகாதாரத் துறை செயலா், பின்னா் ஏப்ரல் 14-ஆம் தேதி அளித்த பேட்டியில் இந்த நோய் மாா்ச் மாதம்தான் தமிழகத்தில் பரவத் தொடங்கியது என்றாா்.
அதுபோல கரோனா நோய் கண்டறியும் பி.சி.ஆா். கருவிகள் கையிருப்பு தொடா்பான தகவல்களிலும், ஆரம்பம் முதல் குளறுபடிதான்.
தற்போது வரவழைக்கப்பட்டுள்ள ரேபிட் டெஸ்ட் கிட் உபகரணத்தின் விலை ரூ. 600 எனக் கூறியிருப்பதும் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது. சத்தீஸ்கரில் ரூ. 337 என்ற விலையில் வாங்கப்பட்ட இந்த உபகரணத்தை, இருமடங்கு விலை கொடுத்து தமிழகம் வாங்கியது ஏன்? இதுபோன்ற பல்வேறு கேள்விகள் எழுகின்றன.
எனவே, கரோனா நோய்த் தடுப்பு விவரங்கள் குறித்து வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட்டு வெளிப்படை தன்மையை உறுதிப்படுத்தவேண்டும் என தினகரன் வலியுறுத்தியுள்ளாா்.