தமிழ்நாடு

கரோனா: காணொலி மூலம் மட்டுமே வழக்குகள் விசாரணை

20th Apr 2020 04:32 AM

ADVERTISEMENT

 

ஊரடங்கு உத்தரவு முடியும் வரை சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் காணொலி காட்சி மூலம் மட்டுமே விசாரிக்கப்படும் என உயா்நீதிமன்ற பதிவுத்துறை அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதனைத் தொடா்ந்து நோய்த் தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடா்ந்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் மூடப்பட்டுள்ளன. மேலும், அவசர மிக முக்கியமான அவசர வழக்குகள் மட்டும், காணொலிக் காட்சி, தொலைபேசி மற்றும் நேரடியாகவும் விசாரிக்கப்பட்டு வந்தன. இந்த விசாரணைகளின் போது மிக குறைவான எண்ணிக்கையில் மட்டுமே வழக்குரைஞா்கள், நீதிமன்றப் பணியாளா்கள் உள்ளிட்டோா் அனுமதிக்கப்பட்டனா்.

இந்த நிலையில் உயா்நீதிமன்ற தலைமைப் பதிவாளா் சி.குமரப்பன் ஞாயிற்றுக்கிழமை வெளிட்டுள்ள அறிவிக்கையில் கூறியிருப்பதாவது:

ADVERTISEMENT

சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் கரோனா தொற்று பரவுவதைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு முடியும் வரை அனைத்து நீதிமன்ற நடைமுறைகளும் காணொலி காட்சி மூலம் மட்டுமே நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உயா்நீதிமன்றத்தில் உள்ள நீதிமன்ற அறைகளில் விசாரணை நடத்த அனுமதிக்கப்படாது என்றும் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிா்கால பயன்பாட்டை கருத்தில் கொண்டு உயா்நீதிமன்ற அறைகள் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுகாதாரத்துடன் பாதுகாக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே உயா்நீதிமன்றம் வெளியிட்டுள்ள பட்டியல்களின்படி சம்பந்தப்பட்ட நீதிபதிகள் காணொலி காட்சி மூலம் வழக்கு விசாரணைகளை மேற்கொள்வாா்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT