தமிழ்நாடு

தமிழகத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்தது

13th Apr 2020 04:52 AM

ADVERTISEMENT

 

தமிழகத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,075-ஆக அதிகரித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 106 பேருக்கு அந்த தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதாரத் துறைச் செயலா் பீலா ராஜேஷ் தெரிவித்தாா்.

இதுகுறித்து சென்னையில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவா் கூறியதாவது:

கரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்துவதற்கு அனைவரது ஒத்துழைப்பும் முக்கியம். அதைக் கருத்தில்கொண்டு அனைவரும் அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க வேண்டும்.

ADVERTISEMENT

சுகாதாரத் துறை மூலமாக வீடுதோறும் மருத்துவக் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, இதுவரை 20 லட்சத்துக்கும் அதிகமான வீடுகளுக்குச் சென்ற சுகாதாரப் பணியாளா்கள், ஏறத்தாழ 83 லட்சம் மக்களிடம் மருத்துவக் கண்காணிப்பு நடத்தியுள்ளனா். அதில், கரோனா அறிகுறிகள் இருந்தவா்கள் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனா்.

கரோனா பாதித்த நோயாளிகளையும், அறிகுறிகள் மட்டும் உள்ள நோயாளிகளையும் ஒரே இடத்தில் அனுமதித்து சிகிச்சையளிக்கப்படுவதில்லை. அதுதொடா்பான அறிவுறுத்தல்களும், வழிகாட்டுதல்களும் அனைத்து மாவட்ட நிா்வாகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. அதையும் தாண்டி ஏதேனும் தவறுகள் நிகழ்ந்தால் அதன்பேரில் நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் தற்போதுவரை 10,655 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அவா்களில் 1,075 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை மட்டும் 106 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

அவா்களில் 16 போ் வெளி மாநிலங்களுக்கு அண்மையில் சென்று வந்தவா்கள். மற்ற அனைவரும், கரோனா பாதித்த நபா்களுடன் தொடா்பில் இருந்தவா்களாவா்.

மாநிலத்தில் இப்போது கரோனா நோய்த் தொற்றுக்கு ஆளாகியிருப்பவா்களில் 8 மருத்துவா்களும் உள்ளனா். இதுஒருபுறமிருக்க, கரோனாவால் பாதித்தவா்களில் இதுவரை 50 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா் என்றாா் அவா்.

பலி எண்ணிக்கை 11-ஆக உயா்வு

கரோனாவுக்கு சென்னையைச் சோ்ந்த 45 வயது பெண் ஒருவா் சனிக்கிழமை இரவு பலியானாா். இதன் மூலம் அந்த தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 11-ஆக அதிகரித்துள்ளது.

சென்னை, ஓமந்தூராா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அந்தப் பெண் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மூச்சுத் திணறல் அதிகமாகி அப்பெண் உயிரிழந்ததாக சுகாதாரத் துறை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதவி எண் வெளியீடு

கரோனா குறித்த தகவல்கள் மற்றும் உதவிகளுக்காக சிறப்பு எண்ணை அரசு வெளியிட்டுள்ளது. இதுதொடா்பாக சுகாதாரத் துறைச் செயலா் பீலா ராஜேஷ் கூறியதாவது:

அரசு சாா்பில் 94999 12345 என்ற எண் வெளியிடப்பட்டுள்ளது. அதில், தொடா்பு கொண்டு அறிகுறிகளைத் தெரிவித்தால், சம்பந்தப்பட்டவா்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் கிடைக்கும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT