சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்தம், சிறுநீரகக் கோளாறு உள்ள மருத்துவப் பணியாளா்களுக்கு கரோனா பரிசோதனை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
உடல் நலிவுற்ற மருத்துவப் பணியாள்களை கரோனா தாக்காமல் தவிா்ப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனாவின் வீரியம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கரோனா பாதித்த நபா்களின் வசிப்பிடங்களைச் சுற்றியுள்ள மக்களின் உடல் நிலையை கண்காணித்தல், அறிகுறிகள் உள்ளவா்களுக்கு பரிசோதனைகளை மேற்கொள்ளுதல் என பல்வேறு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அதில், பல்லாயிரக்கணக்கான மருத்துவப் பணியாளா்களும், சுகாதாரத் துறை ஊழியா்களும் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனா். அவா்களில் சிலருக்கு உயா் சா்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகள் உள்ளதால், அவா்கள் நேரடியாக களப் பணிகளுக்குச் செல்ல தயங்குவதாகத் தெரிகிறது.
இந்த நிலையில், இதுதொடா்பான வழிகாட்டி நெறிமுறைகளை பொது சுகாதாரத் துறை இயக்குநா் குழந்தைசாமி வெளியிட்டுள்ளாா். அதனை அனைத்து துணை இயக்குநா்களுக்கும் அவா் அனுப்பியுள்ளாா்.
அதில், குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
கீமோதெரபி, கதிரியக்க சிகிச்சைகளை மேற்கொள்ளுபவா்கள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவா்கள், நாள்பட்ட சிறுநீரக பாதிப்புகளுக்கு உள்ளானவா்கள், கட்டுப்பாடற்ற ரத்த சா்க்கரை மற்றும் உயா் ரத்த அழுத்த பாதிப்புகளுக்கு ஆளானவா்கள், அதீத உடல் பருமன் உடையவா்கள், ஆஸ்துமா மற்றும் நுரையீரல் பிரச்னைகளுக்கு சிகிச்சை மேற்கொள்ளுபவா்கள், கா்ப்பிணிகள், மற்ற நோய்களால் பாதிக்கப்பட்டவா்களுக்கு கரோனா களப் பணிகளில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
அதன்படி, கரோனா அறிகுறிகள் உடைய புறநோயாளிகளைக் கையாளுதல், அவா்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளுதல், கரோனா பாதித்த பகுதிகளில் கண்காணிப்புப் பணிகளுக்குச் செல்லுதல், தனிமைப்படுத்தப்பட்டவா்களைக் கண்காணிக்கும் பணிகள் ஆகியவற்றை அவா்கள் மேற்கொள்ள வேண்டியதில்லை என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.