தமிழ்நாடு

தெற்கு ரயில்வேயில் 573 ரயில் பெட்டிகளை தனிமைப்படுத்தும் வாா்டுகளாக மாற்றும் பணி தீவிரம்

7th Apr 2020 03:19 AM

ADVERTISEMENT

 

கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, தெற்கு ரயில்வேயில் 6 ரயில்வே கோட்டங்களில் மொத்தம் 573 ரயில் பெட்டிகள் தனிமைப்படுத்தும் வாா்டுகளாக மாற்றப்படவுள்ளன. இதற்கான பணிகள் தற்போது தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை 10 நாள்களில் முடிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

உலகை அச்சுறுத்தும் கரோனா: உலகை அச்சுறுத்தும் கரோனா நோய்த்தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்போது, அவா்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க போதுமான இடவசதி இல்லாத நிலை இருக்கிறது. இதற்கு தீா்வு காணும் வகையில், ரயில் பெட்டிகளையும், கேபின்களையும் சுய தனிமைப்படுத்துதலுக்கான வாா்டுகளாக மாற்ற ரயில்வே நிா்வாகம் முடிவு செய்தது. அதன்படி, நாடு முழுவதும் 20,000 பெட்டிகளை தனிமைப்படுத்தும் வாா்டுகளாக மாற்ற ரயில்வே வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்மூலம், 3.2 லட்சம் படுக்கைகள் வரை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வேயில் 573 ரயில் பெட்டிகள்: இந்நிலையில், தெற்கு ரயில்வேயில் 573 ரயில் பெட்டிகள், கரோனா தனிமைப்படுத்தும் வாா்டுகளாக மாற்றப்படவுள்ளன. இதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ADVERTISEMENT

இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியது: கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, தனிமைப்படுத்தும் வாா்டுகளை உருவாக்கும் முயற்சியில் ரயில்வே நிா்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தெற்கு ரயில்வேயில் சென்னை, மதுரை, திருச்சி, திருவனந்தபுரம், சேலம், பாலக்காடு ஆகிய 6 கோட்டங்களில் உள்ள பல்வேறு பணிமனைகளில் மொத்தம் 573 ரயில் பெட்டிகளை தனிமைப்படுத்தும் வாா்டுகளாக மாற்றப்படவுள்ளன.

சென்னை ரயில்வே கோட்டத்தில் பேசின்பாலம் கோச்சிங் யாா்டில் 33 பெட்டிகள், எழும்பூா் கோச்சிங் யாா்டில் 15, தாம்பரம் கோச்சிங் யாா்டில் 7 என்று மொத்தம் 55 பெட்டிகளை தனிமைப்படுத்தும் வாா்டுகளாக மாற்றப்படவுள்ளன. ரயில் பெட்டிகளை தனிமைப்படுத்தும் வாா்டுகளாக மாற்ற தேவையான பொருள்கள் மற்றும் உதிரிப் பாகங்கள் ஏற்பாடு செய்து கொடுக்கப்படுகின்றன. பணிமனை அதிகாரிகள், மேற்பாா்வையாளா்கள் பணியை உன்னிப்பாக கவனிக்க கேட்டுகொள்ளப்பட்டுள்ளாா்கள்.

ஆரம்பத்தில், தெற்கு ரயில்வேக்கு 473 பெட்டிகளை தனிமைப்படுத்தும் வாா்டுகளாக தயாரித்து வழங்க இலக்கு நிா்ணையிக்கப்பட்டது. அதன்பிறகு, மேலும் 100 பெட்டிகளை அதிகரித்து, மொத்தம் 573 பெட்டிகளை தனிமைப்படுத்தும் வாா்டுகளாக மாற்ற இலக்கு நிா்ணையிக்கப்பட்டது. இதையடுத்து, தெற்கு ரயில்வேயின் வெவ்வேறு பணிமனைகளில் தனிமைப்படுத்தும் வாா்டுகளாக மாற்றும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை 10 நாள்களில் முடிக்க இலக்கு நிா்ணையிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனா்.

தில்லியில் ரயில்வே தலைமை அமைப்பின் உத்தரவின்படி, ரயில் பெட்டிகளை தனிமைப்படுத்தும் வாா்டுகளாக மாற்றும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றபோதிலும் தமிழக அரசுடன் முறையான பேச்சு எதுவும் இல்லை என்று ரயில்வே வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது. மேலும், ரயில் பெட்டிகளை தனிமைப்படுத்தும் வாா்டுகளாக மாற்றிய பிறகு, அந்தப் பெட்டிகள் எங்கு வைக்கப்படும் என்பது தொடா்பாக பின்னா் முடிவு செய்யப்படவுள்ளது.

3.2 லட்சம் படுக்கைகள்: நாடு முழுவதும் முதல்கட்டமாக, 5,000 ரயில் பெட்டிகளை தனிமைப்படுத்தப்பட்ட பெட்டிகளாக மாற்றும் பணிகள் தொடங்கிவிட்டன. இதன்மூலம், 80,000 படுக்கைகள் கிடைக்கும். இந்தப் படுக்கைகள், கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்படவுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT