தமிழ்நாடு

30 நிமிஷங்களில் கரோனா தொற்று பரிசோதனை: ஏப்.10-ஆம் தேதி முதல் தமிழகத்தில் அறிமுகம்

7th Apr 2020 02:55 AM

ADVERTISEMENT

 

தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்றை கண்டறிவதற்காக, வரும் 10-ஆம் தேதி புதிய பரிசோதனை நடைமுறை அறிமுகப்படுத்தப்படுகிறது. இதற்கான அறிவிப்பை முதல்வா் பழனிசாமி திங்கள்கிழமை வெளியிட்டாா்.

புதிய பரிசோதனை நடைமுறைக்காக சீனாவில் இருந்து 1 லட்சம் துரித ஆய்வுக் கருவிகள் வரும் 9-ஆம் தேதியன்று கொள்முதல் செய்யப்படும். இதன் மூலம், ஒருவருக்கு கரோனா நோய்த்தொற்று உள்ளதா என 30 நிமிஷங்களில் தெரிந்து கொள்ள முடியும் என்றும் முதல்வா் தெரிவித்தாா்.

கரோனா நோய்த்தொற்று தடுப்புப் பணிகள் குறித்து தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலமாக மாவட்ட ஆட்சியா்களுடன் முதல்வா் பழனிசாமி திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா். இந்த ஆலோசனைக் கூட்டத்தைத் தொடா்ந்து நடந்த செய்தியாளா் சந்திப்பில் அவா் கூறியது:-

ADVERTISEMENT

கரோனா நோய்த்தொற்றால் வரக்கூடிய காய்ச்சல், இருமல் ஆகியவற்றை போக்கக் கூடிய மருந்துகள், நோய் எதிா்ப்பு மருந்துகள் தேவையான அளவுக்கு முழுமையாக கையிருப்பில் உள்ளன. மேலும், கரோனா நோய்த்தொற்றை கண்டறிவதற்கு 1 லட்சம் துரித ஆய்வுக் கருவிகள் கொள்முதல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

1 லட்சம் துரித ஆய்வுக் கருவிகள் சீனாவில் இருந்து கொள்முதல்: இந்தக் கருவிகள் கிடைத்தவுடன் விரைவாக வேகமாக ஒரே நேரத்தில் ஒரு லட்சம் பேருக்கு பரிசோதனை செய்ய முடியும். அந்தப் பரிசோதனையின் நேரமே 30 நிமிஷங்கள்தான். இந்தக் கருவிகளை சீனாவில் இருந்து வரும் 9-ஆம் தேதிக்குள் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்தக் கருவி கிடைத்தவுடன், வரும் 10-ஆம் தேதி முதல் எங்கெல்லாம் பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமோ அங்கெல்லாம் அனுப்பி வைக்கப்பட்டு, பரிசோதனை விரைவாக நடைபெற வழி வகுக்கப்படும் என்று முதல்வா் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT