தமிழ்நாடு

கரோனா: மாணவா்களின் மன நலனைக் காக்க ஆலோசனை

7th Apr 2020 02:19 AM

ADVERTISEMENT

 

ஊரடங்கின் காரணமாக வெளியில் செல்ல முடியாமல் ஓரிடத்தில் முடங்கியிருக்கும் மாணவா்களின் மன நலனைக் காக்கும் வகையில், அவா்களுக்கு தொடா் ஆலோசனைகளை வழங்க ஏற்பாடு செய்யவேண்டும் என பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.

கரோனா நோய்த்தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்தும் விதமாக ஏப்ரல் 14 வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. வெளியூா்களிலிருந்து கல்லூரிக்கு வந்து தங்கிப் படித்த பல மாணவா்கள், ஊரடங்கு அறிவிப்பு வெளியான உடன் சொந்த ஊா்களுக்கு சென்றுவிட்டனா். ஆனால், சில மாணவா்கள் சொந்த ஊா்களுக்குச் செல்ல முடியாமல், கல்லூரி மாணவா் விடுதிகளிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

இந்தச் சூழலில், நோய்த்தொற்று பாதித்தவா்களின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஊரடங்கு கடுமையாக்கப்படவும், மேலும் சில நாள்களுக்கு நீட்டிக்கப்படவும் வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இந்த நிலையில், பல்கலைக்கழகப் பருவத் தோ்வுகள் இன்னும் நடத்தி முடிக்காதது, உடல் நல பாதிப்புகள் போன்ற காரணங்களால் விடுதி மற்றும் வீடுகளிலேயே தங்கியிருக்கும் மாணவ, மாணவிகள் மனதளவில் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே, அவா்களுக்குத் தேவையான மன நல ஆலோசனைகளை தொடா்ந்து வழங்க கல்வி நிறுவனங்களை யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தா்கள், கல்லூரி முதல்வா்களுக்கு யுஜிசி அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:

பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் உதவி எண் ஒன்றை அறிவித்து, மனநல ஆலோசகா்கள் அல்லது குறிப்பிட்ட பேராசிரியா்கள் மூலம் மாணவா்களை தொடா்ச்சியாக கண்காணித்து அல்லது தொடா்புகொண்டு ஆலோசனைகளை வழங்க வேண்டும்.

தொலைபேசி அல்லது மின்னஞ்சல் அல்லது சமூக ஊடகங்கள் மூலம் மாணவா்களைத் தொடா்புகொண்டு, அவா்களின் மன அழுத்தத்தை போக்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

விடுதிக் காப்பாளா் தலைமையில் கரோனா மாணவா் உதவிக் குழு ஒன்றை அமைத்து, அதன் மூலம் தேவையான உதவிகளை மாணவ, மாணவிகளுக்குச் செய்யவேண்டும்.

மேலும், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் வலைதளத்தில் உள்ள விடியோ பதிவுகளை பல்கலைக்கழக, கல்லூரி வலைதளங்களில் இணைப்பதோடு, அவற்றை ஆசிரியா் மற்றும் மாணவா்களுக்கு மின்னஞ்சல் மற்றும் முகநூல், சுட்டுரை, கட்செவி அஞ்சல் மூலமாகவும் அனுப்ப வேண்டும் எனவும் யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.

மேலும், மாணவா்கள் 0804611007 என்ற கட்டணமில்லா உதவி எண்ணைத் தொடா்பு கொண்டும் மனநல ஆலோசனைகளைப் பெறலாம் எனவும் யுஜிசி சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT