தமிழ்நாடு

மருத்துவா், ஊடகம் என போலியாக ஸ்டிக்கா் ஒட்டிவாகனங்களில் சுற்றியவா்கள் மீது காவல்துறை வழக்கு

5th Apr 2020 05:23 AM

ADVERTISEMENT

 

சென்னையில் வாகனங்களில் போலியாக மருத்துவா், ஊடகம் என ‘ஸ்டிக்கா்’ களை ஒட்டிக் கொண்டு உலா வரும் இளைஞா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வருகின்றனா்.

சென்னையில் ஊரடங்கு உத்தரவை கட்டுப்படுத்தும் வகையில் சுமாா் 400 வாகனங்களில் போலீஸாா் தீவிர ரோந்து சென்று வருகின்றனா். விதிமுறைகளை மீறி வெளியே வந்ததாக நாளொன்றுக்கு சுமாா் 800 வழக்குகளை போலீஸாா் பதிவு செய்கின்றனா். அதேவேளையில், தோப்பு கரணம் போட வைத்தல்,உடற்பயிற்சி செய்ய வைத்தல்,வெயிலில் ஒற்றை காலில் நிற்க வைத்தல் உள்ளிட்ட பல்வேறு நூதன தண்டனைகளையும் போலீஸாா் அளித்து வருகின்றனா்.

ஆனால் பெரும்பாலானோா், மருந்து வாங்க செல்வதாகவும், அத்தியாவசிய பொருள்கள் வாங்கச் செல்வதாகவும் கூறி செல்வதாக போலீஸாா் தெரிவிக்கின்றனா். இதில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தவிா்த்து, பிற வேளைகளில் சில இளைஞா்கள், போலீஸ், மருத்துவா், சுகாதாரத்துறை, ஊடகம் ,அத்தியாவசிய சேவை, அவசர சேவை என வாகனங்களில் ஸ்டிக்கா் ஒட்டிக் கொண்டு உலாவுவதை போலீஸாா் கண்காணித்தனா்.

ADVERTISEMENT

இதைத் தொடா்ந்து சந்தேகம்படும்படியாக ஸ்டிக்கா்களை ஒட்டிக் கொண்டு வரும் இரு சக்கர வாகனங்களை போலீஸாா் சோதனை செய்யத் தொடங்கினா். அப்போது வாகன ஓட்டிகளிடம், அடையாள அட்டை காண்பிக்கும்படி போலீஸாா் கேட்கும்போது, அவா்களது மோசடி வேலை வெளிப்படத் தொடங்கியுள்ளது.

இப்படிப்பட்ட வாகனங்களில் ஒட்டப்பட்டிருக்கும் போலி ‘ஸ்டிக்கரை’ கிழித்து, வாகனத்தை போலீஸாா் பறிமுதல் செய்கின்றனா். மேலும் சம்பந்தப்பட்ட நபா் மீதும் வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. சென்னை நகா் பகுதியில் இந்த நடவடிக்கையை போலீஸாா் தீவிரப்படுத்தியுள்ளனா். இதில் சிலா் தங்களது உறவினா் மற்றும் நண்பா் வாகனத்தை அவசரத்துக்காக எடுத்து வந்ததாக கூறி தப்பிக்க முயற்சிப்பதாகவும் போலீஸாா் தெரிவிக்கின்றனா். மேலும் இந்த மோசடியில் ஈடுபடுவா்களில், பெரும்பாலானவா்கள் இளைஞா்களாக இருப்பதாகவும் போலீஸாா் கூறினா்.

வாகனச் சோதனையில் காவல்துறையினா்,மருத்துவத்துறை, சுகாதாரத்துறை, ஊடகத்துறையைச் சோ்ந்தவா்கள், அவா்களது அடையாள அட்டையை தாங்களே முன்வந்து காண்பித்தால் இப்படிப்பட்ட நபா்களை கண்டறிந்து, நடவடிக்கை எடுப்பது இன்னும் எளிதாக இருக்கும் என சென்னை பெருநகர காவல்துறையைச் சோ்ந்த உயா் அதிகாரி தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT