திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் கரோனா நோயால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியர் த.ஆனந்த், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எம்.துரை ஆகியோர், ஞாயிற்றுக்கிழமை நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தனர்.
கரோனா தொற்று நோய் உலகத்தையே ஆட்டிப்படைத்துப் புரட்டிப் போட்டுள்ளது. கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த உலகம் முழுவதும் ஊரடங்கும் போடப்பட்டுள்ளன. கூத்தாநல்லூர் வட்டத்தில், 3 பேருக்கு கரோனா தொற்று நோய் ஏற்பட்டுள்ளது. அதன் விளைவால், அப்பகுதிகளில் தடுப்புக் கட்டைகள் அமைக்கப்பட்டு, வெளியாட்கள் யாரும் தடை ெசய்யப்பட்டுள்ள பகுதிக்குள் போகக் கூடாது எனவும் அறிவிப் பலகையும் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கூத்தாநல்லூரில் வடபாதிமங்கலம் பிரதான சாலை, கொரடாச்சேரி பிரதான சாலை மற்றும் பொதக்குடி உள்ளிட்ட தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை, மாவட்ட ஆட்சியர் த.ஆனந்த், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எம்.துரை ஆகியோர் நேரில் பார்வையிட்டு, ஆய்வு நடத்தினர். அப்போது, மாவட்ட ஆட்சியர் த.ஆனந்த், தொடர்ந்து அனைத்து இடங்களிலும் கிருமி நாசினிகளை தெளிக்க வேண்டும்.
தனிமைப்படுத்தப்பட்ட வீடுகள் உள்ளிட்ட அனைத்து வீடுகளையும் தொடர்ச்சியாக கவனிக்க வேண்டும். சாலைகளில் குப்பைகள் கொட்டுபவர்களுக்கு அபராதம் விதித்து விடுங்கள் என வட்டாட்சியர் மற்றும் ஆணையரிடம் தெரிவித்தார். ஆய்வின் போது, வட்டாட்ச்சியர் தெய்வநாயகி, ஆணையர் லதா ராதாகிரூஷ்ணன், பொறியாளர் ராஜகோபால், சுகாதார ஆய்வாளர் அருண்குமார் உள்ளிட்டோர் சென்றனர்.