தமிழ்நாடு

குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 நிவாரணத் தொகை; வீடுகளுக்கே சென்று வழங்கிய அமைச்சர்

5th Apr 2020 12:01 PM

ADVERTISEMENT

 

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணத் தொகையை வீட்டிற்குச் சென்று வழங்கும் பணியை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

விராலிமலை கடை எண்-1 ல் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு கரோனா வைரஸ் தடுப்பு நிவாரணத் தொகை ரூ.1,000 மற்றும் அரிசி, பருப்பு, கோதுமை. ஆயில், சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன. 

இப்பணியை தொடங்கி வைத்த மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:

ADVERTISEMENT

தமிழக முதல்வர் உத்தரவுப்படி, பொது வினியோக திட்டத்தின் கீழ், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு கரோனா வைரஸ் நிவாரணத் தொகை ரூ.1,000, அரிசி, சர்க்கரை, பருப்பு, கோதுமை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்கள் விலையில்லாமல் வழங்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக ஞாயிற்றுகிழமை முதல் வீடுகளுக்கேச் சென்று ரூ. 1000 வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. 

இந்தப் பணிகளானது வருகிற 14 ஆம் தேதி வரை தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை டோக்கன் வழங்கப்பட்டுள்ள நபர்களுக்கு வழங்கப்படும். மேலும், நாள் ஒன்றுக்கு 80 டோக்கன் முதல் 100 டோக்கன் வரை குடும்ப அட்டைதாரர்களுக்கு சமூக இடைவெளி கடைபிடித்து உணவு பொருட்கள் வழங்கப்பட உள்ளது. ஏற்கனவே, வீடுகள் தோறும் டோக்கன் வழங்கி அதில் தேதியும் குறிப்பிடபட்டுள்ளது. அவரவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தேதியில் நிவாரணப் பொருட்கள் பெற்றுகொள்ளலாம்.

பொதுமக்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை விவரத்தினை ஊராட்சிப் பணியாளர்கள் மூலமாகவும் ஒலிபெருக்கி வாயிலாகவும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. ரேஷன் கடைகளில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அன்றைய தேதியில் நிவாரணப் பொருட்களை பெற்றுக் கொள்ளவேண்டும் என்றார்.

முன்னதாக ஊராட்சி மன்ற தூய்மைப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார். தொடர்ந்து விராலிமலை பகுதி தொழிற்சாலைகளில் பணிபுரியும் வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு அரிசி, சர்க்கரை, பருப்பு, கோதுமை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய இலவச பையை வழங்கினார்.

இதில் மாவட்ட ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி, திட்ட அலுவலர் காளிதாசன், கோட்டாட்சியர் டெய்சி குமார், மாவட்ட பால்வளத்தலைவர் செ. பழனியாண்டி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஆர். கே. சிவசாமி, வட்டாட்சியர் ஜெ. சதிஸ்சரவணகுமார், வட்டவழங்கல் அலுவலர் உமாமகேஸ்வரி, விராலிமலை கூட்டுறவு சங்கத்தலைவர் ஜெ.ஆர்.அய்யப்பன், விராலிமலை ஊராட்சி மன்றத் தலைவர் எம். ரவி, துணைத்தலைவர் சி. தீபன்சக்கரவர்த்தி, ஒன்றியக்குழு உறுப்பினர் எம். மணிகண்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT