தமிழ்நாடு

இரவு 9.09 மணிக்கு மின் பிரச்னை ஏற்பட்டால் உடனடியாக சரி செய்யப்படும்: அமைச்சர் தங்கமணி

5th Apr 2020 11:19 AM

ADVERTISEMENT

 

இன்று இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின் விளக்குகள் அணைக்கப்பட்ட பிறகு, மின்சாரப் பிரச்னை ஏற்பட்டால் மின்சார வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கப்படும்பட்சத்தில், உடனடியாக சரி செய்யப்படும் என்று தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். 

கரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக ஒட்டுமொத்த இந்தியா்களும்  ஒருங்கிணைந்து செயல்படுவதை வெளிப்படுத்தும் நோக்கில், மக்கள் அனைவரும் ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்குத் தொடங்கி 9 நிமிடங்களுக்கு வீட்டில் மின்விளக்குகளை அணைத்து விளக்குகளை ஏற்ற வேண்டும் என்று பிரதமா் வேண்டுகோள் விடுத்திருந்தாா்.

இந்நிலையில், பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க மின்விளக்குகளை மட்டும் அணைக்க வேண்டும் என்றும் மற்ற மின் சாதனங்கள் வழக்கம்போல் இயக்கத்தில் இருக்கலாம் என்றும் மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மின்கட்டமைப்பில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாத வண்ணம் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 

ADVERTISEMENT

தொடர்ந்து இதுகுறித்து, இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி, 'இரவு 9 மணிக்கு வீடுகளில் மின்விளக்குகள் அணைக்கப்பட்டாலும், மற்ற மின் சாதனங்கள் இயங்கலாம். அவற்றை அணைக்கத் தேவையில்லை. இரவு 9.09 மணிக்கு பிறகு மின்சார பிரச்னை ஏற்படும் என்று யாரும் பயப்பட வேண்டும். மின் விளக்குகள் அணைக்கப்பட்ட பிறகு, மின்சாரப் பிரச்னை எங்கேனும் ஏற்பட்டால் மின்சார வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கப்படும்பட்சத்தில், உடனடியாக சரி செய்யப்படும். மின்சார ஊழியர்கள் அனைவரும் தயார்நிலையில் இருக்கின்றனர். இரவு 9 மணிக்கு மருத்துவமனைகளில் விளக்குகள் அணைக்கப்படாது. மின் அணைப்பு நிகழ்வு சவாலானது என்றாலும் சாத்தியமானது. 90% மின் ஊழியர்கள் பணியில் உள்ளனர்' என்று தெரிவித்தார். 

மேலும், 'தமிழகத்தில் வழக்கமான காலத்தில் 16000 மெகா வாட் தேவைப்படும். தற்போது 11000 மெகா வாட் போதுமானதாக இருக்கிறது. எனவே, ஊரடங்கு காலத்தில் மின்சாரத் தேவை குறைந்திருக்கிறது.

டாஸ்மாக் மூடுவதால் நாள் ஒன்றுக்கு ரூ.48 கோடி இழப்பு ஏற்படுகிறது. ' என்றார். 

Tags : coronavirusx
ADVERTISEMENT
ADVERTISEMENT