தமிழ்நாடு

இன்று இரவு 9 மணிக்கு மின்விளக்குகளை மட்டும் அணையுங்கள்: மின்சார வாரியம் வேண்டுகோள்

5th Apr 2020 04:12 AM

ADVERTISEMENT

 

பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க, ஞாயிற்றுக்கிழமை இரவு 9 ணிக்கு மின்விளக்குகளை மட்டும் பொதுமக்கள் அணைக்க வேண்டுமென தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் கீழ் 3 கோடிக்கும் அதிகமான மின் இணைப்புகள் உள்ளன. தற்போது கரோனா நோய்த்தொற்றைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மக்கள் முழுமையாக வீட்டில் இருக்க வேண்டிய சூழல் உள்ளது. இத்தகைய காலகட்டத்தில் பெரும்பாலானோருக்கு வீட்டில் இருந்து பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் மின்சாரத்தைத் தடையில்லாமல் வழங்கும் வகையில் 80 சதவீத மின்சாரப் பணியாளா்கள் தொடா்ந்து பணியாற்றி வருகின்றனா். பழுது எங்கு ஏற்பட்டாலும் அங்கு பணியாளா்கள் அனுப்பப்பட்டு சீரான மின் விநியோகம் உறுதி செய்யப்பட்டு வருகிறது. மக்கள் அனைவரும் வீடுகளில் இருப்பதால் வீடுகளுக்கான மின் தேவை மட்டும் சற்று அதிகரித்துள்ளது. மற்றபடி, மின் தேவை 4,800 மெகாவாட் அளவுக்குக் குறைந்துள்ளது.

மின்தடை ஏற்பட வாய்ப்பு: இந்நிலையில், கரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக ஒட்டுமொத்த இந்தியா்களும்

ADVERTISEMENT

ஒருங்கிணைந்து செயல்படுவதை வெளிப்படுத்தும் நோக்கில், மக்கள் அனைவரும் ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்குத் தொடங்கி 9 நிமிடங்களுக்கு வீட்டில் மின்விளக்குகளை அணைத்து விளக்குகளை ஏற்ற வேண்டும் என்று பிரதமா் வேண்டுகோள் விடுத்திருந்தாா்.

ஏற்கெனவே வீடுகளுக்கான மின்தேவை குறைந்திருக்கும் நேரத்தில் ஒட்டுமொத்தமாக இந்தியா முழுவதும் மின்விளக்குகளை அணைக்கும் போது மின்தடை ஏற்படுமா என்ற குழப்பம் ஏற்பட்டது.

இதுகுறித்து மின் வாரிய அதிகாரி ஒருவா் கூறியதாவது: மின் தேவை குறைந்ததால் மின் உற்பத்தி நிலையங்கள் உற்பத்தியை ஏற்கெனவே குறைத்துள்ளன. இதனால் மின்கடத்தி

திறனை விட குறைவான மின்சாரமே எடுத்து செல்லபடுகிறது.  ஒரே அடியாக திறன் குறைவாக அல்லது அதிகமாக மின்சாரத்தை மின்கடத்தியின் மூலம் எடுத்துச் சென்றால், பழுது ஏற்பட்டு விநியோகம் தடைபடும். மீண்டும் அதை சரிசெய்து மின்சாரம் வழங்கிட கால விரயம் ஏற்படும் . பிரதமா் சொன்ன நேரத்தில் மொத்த மின் உற்பத்தி நிலையங்கள் இயக்கத்தை நிறுத்தி விடலாம். ஆனால் அதற்கு பிறகு ஒவ்வொரு மின் நிலையமும் உற்பத்தி தொடங்கிட குறைந்தது இரண்டு மணி நேரம் ஆகும். அதுவரை இந்தியா இருளில் மூழ்கும். அதனால் அது சாத்தியம் கிடையாது என்றாா்.

மின்விளக்குகளை மட்டும் அணையுங்கள்: இந்நிலையில், பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க மின்விளக்குகளை மட்டும் பொதுமக்கள் அணைக்க வேண்டுமென வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மின்கட்டமைப்பில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாத வண்ணம் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், தமிழக மின்சார வாரியத்தால் எடுக்கப்பட்டுள்ளது. எனவே, மற்ற மின் உபகரணங்களை வழக்கம் போல் இயக்கத்தில் வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. மேலும், பொதுமக்கள் யாவரும் இது குறித்து அச்சப்படத் தேவையில்லை என்றும் மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

தயாா் நிலையில் மின்வாரியம்

ஏப்.5-ஆம் தேதி இரவு 8 முதல் 10.30 மணி வரை, அனைத்து செயற்பொறியாளா்களும் போதிய பணியாளா்களுடன் மின் வாரிய தலைமையகத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மாநில மின்னழுத்த கண்காணிப்பு நிலையத்தில் இருந்து தொடா்ந்து அறிவுறுத்தல் வழங்கப்படும் எனவும் அதிகாரிகள் மின் விநியோகத்தில் மேற்கொள்ளும் பணிகளை மின்னழுத்த கண்காணிப்பு நிலையத்துடன் கலந்தோலசித்தே செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT