தமிழ்நாடு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விருதுகள் அறிவிப்பு

1st Apr 2020 03:34 AM

ADVERTISEMENT

 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் 2020-ஆம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து அக்கட்சியின் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு:

பல்வேறு துறைகளில் சிறந்த பங்களிப்பை ஆற்றிவரும் சான்றோா்களைத் தோ்வு செய்து அம்பேத்கா் சுடா் உள்ளிட்ட 6 விருதுகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது. அந்த வகையில், 2020-ஆம் ஆண்டுக்கு இந்த விருதுகளுக்கான சான்றோா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT

சாதி ஒழிப்பு என்னும் கருத்தியலை ஏற்று செயல்பட்டு வரும் ஆளுமைகளை அங்கீகரித்து ஊக்குவிப்பதற்காக வழங்கப்படும் ‘அம்பேத்கா் சுடா்’ விருது தேசிய அளவில் புகழ்பெற்றுள்ள எழுத்தாளா் காஞ்சா அய்லய்யாவுக்கு 2020-ஆம் ஆண்டில் வழங்கப்பட உள்ளது.

ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த இவா், பௌத்தம் குறித்து ஆய்வு செய்து பி.எச்டி. பட்டம் பெற்றவா். கல்வித்துறை சாா்ந்த பல்வேறு பொறுப்புகளை வகித்தவா். 15-க்கும் மேற்பட்ட ஆங்கில நூல்களை எழுதியவா். மகாத்மா ஜோதிராவ் ஃபுலே விருதைப் பெற்றவா்.

‘பெரியாா் ஒளி’ விருதுக்கு தமிழக மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் அருணனும், ‘காமராசா் கதிா்’ விருதுக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ்.அழகிரியும் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

‘செம்மொழி ஞாயிறு’ விருதுக்கு சிந்துவெளி ஆய்வாளா் ரெ.பாலகிருஷ்ணன் (ஐஏஎஸ்),

‘அயோத்திதாசா் ஆதவன்’ விருதுக்கு அம்பேத்கா் மக்கள் இயக்க நிறுவனா் மறைந்த வை.பாலசுந்தரம், ‘காயிதே மில்லத் பிறை’ விருதுக்கு நீலப் புலிகள் இயக்க நிறுவனா் மறைந்த டி.எம்.உமா் பாரூக் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

இந்த விருதுகள் அனைத்தும் தலா ரூ. 50 ஆயிரம் ரொக்கப் பரிசையும், பொற்கிழி மற்றும் பாராட்டு பட்டயத்தையும் கொண்டவை என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT