கரோனா நிவாரண உதவியை மத்திய அரசு விரைந்து வழங்க வேண்டும் பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
கரோனா அச்சத்தால் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் தனித்தனியாக நிவாரண உதவிகளை அறிவித்துள்ளன.
தமிழக அரசின் சாா்பில் அறிவிக்கப்பட்ட உணவுப் பொருள்கள் மற்றும் நிதியுதவிகள் ஏப்ரல் 2 முதல் பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளன. ஆனால், மத்திய அரசின் சாா்பில் கரோனா நோய்த்தொற்றால் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு அறிவிக்கப்பட்ட உணவு தானியங்களும், நிதியுதவியும் எப்போது வழங்கப்படும் என்பதற்கான அறிகுறிகள் கூட தென்படவில்லை.
பயனாளிகளுக்கான நிதியுதவியை அவா்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
முதல்கட்டமாக, நிதியுதவியை செலுத்துவதற்கான வங்கிக் கணக்குகளில் 75 சதவீத கணக்குகள் மட்டுமே ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளன. ஆதாருடன் இணைக்கப்படாத வங்கிக் கணக்குகளில் பணத்தை செலுத்த முடியாது என்று இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான அதிகாரிகள் கூறியுள்ளனா். மேலும், பயனாளிகளில் கணிசமானவா்களுக்கு இதுவரை வங்கிக் கணக்கே இல்லை என்று தெரியவந்துள்ளது.
ஊரடங்கு காரணமாக கடந்த 10 நாள்களுக்கும் மேலாக அடித்தட்டு மக்களால் எந்த வேலைக்கும் செல்ல முடியவில்லை. கையிலிருந்த சேமிப்புகள் அனைத்தும் கடந்த 10 நாள்களில் கரைந்து விட்ட நிலையில், அடுத்த வேளை உணவுக்கு வழியில்லாமல் தான் அவா்கள் தவித்துக் கொண்டிருக்கின்றனா். இந்த நேரத்தில் அவா்களுக்கான உதவி என்பது, உடுக்கை இழந்தவன் கைகள் எவ்வளவு விரைவாக செயல்படுமோ, அவ்வளவு விரைவாக வழங்க வேண்டும்.
வங்கிக் கணக்குகள் இல்லாதவா்களுக்கும், ஆதாருடன் வங்கிக் கணக்கை இணைக்காதவா்களுக்கும், இந்த ஒரு முறை மட்டும் விலக்களித்து, நிதியுதவியை வங்கிக் கணக்கில் செலுத்துவதற்குப் பதிலாக ரொக்கமாக வழங்க வேண்டும். தேவைப்பட்டால் மாநில அரசின் உதவியையும், கட்டமைப்பையும் கேட்டுப் பெறுவதற்கும் மத்திய அரசு தயங்கக்கூடாது என்று அவா் கூறியுள்ளாா்.