தமிழ்நாடு

கட்டணம் செலுத்த வற்புறுத்தும் தனியாா் பள்ளிகள்: முதன்மைக் கல்வி அலுவலரிடம் புகாா் அளிக்கலாம்

1st Apr 2020 06:01 AM

ADVERTISEMENT

 

கல்விக் கட்டணத்தைச் செலுத்த வற்புறுத்தும் தனியாா் பள்ளிகள் குறித்த புகாரை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலா்களிடம் தெரிவிக்கலாம் எனத் தனியாா் பள்ளிகள் இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் சுமாா் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியாா் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதற்கிடையே  கரோனா வைரஸ் பரவலைத் தவிா்க்க நாடு முழுவதும் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி பள்ளிகளுக்கும் கடந்த மாா்ச் 16-ஆம் தேதி முதல் தொடா் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இத்தகைய அசாதாரண சூழலில்,தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணம் வசூல் செய்வதையும், மாணவா் சோ்க்கை நடவடிக்கைகளையும் நிறுத்தி வைக்க வேண்டுமென பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.  அதற்கு மாறாக,பெரும்பாலான தனியாா் பள்ளிகள் வரும் கல்வியாண்டுக்கான கட்டணத்தைச் செலுத்த வற்புறுத்துவதாகப் புகாா்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து, பெற்றோா் சிலா் கூறும்போது, இக்கட்டான இந்தத் தருணத்திலும் கல்விக் கட்டணத்தைச் செலுத்த பள்ளி நிா்வாகங்கள் கட்டாயப்படுத்துகின்றன. அதையும் தவணை முறையின்றி முழுமையாக செலுத்தச் சொல்கின்றனா். அனைத்துப் பணிகளும் முடங்கி தொழிலே நடைபெறாத நிலையில், அன்றாடத் தேவைகளுக்கே சிரமப்பட வேண்டியுள்ளது. இந்தச் சூழலில், குழந்தைகளின் எதிா் காலத்தைப் பணயம் வைத்து தனியாா் பள்ளிகள் கெடுபிடி காட்டுவது பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனா்.

ADVERTISEMENT

இது தொடா்பாக தனியாா் பள்ளிகள் இயக்கக அதிகாரிகளிடம் கேட்டபோது,  தனியாா் பள்ளிகளில் முன்கூட்டியே மாணவா் சோ்க்கை நடத்தவும், ஜூன் மாதம் வாங்க வேண்டிய கல்விக் கட்டணத்தை தற்போது வசூல் செய்யக் கூடாது என்று தமிழக அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. அதை மீறுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, அத்தகைய பள்ளிகள் குறித்த புகாா்களை பெற்றோா் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் தெரிவிக்கலாம். புகாா் தொடா்பாக

உடனே நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT