தமிழ்நாடு

அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் தானியங்கி கை கழுவும் இயந்திரம்

1st Apr 2020 01:59 PM

ADVERTISEMENT

 

சேலம் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் தானியங்கி முறையில் கை கழுவும் இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் காய்ச்சல் தொற்று தடுப்பு நடவடிக்கையாகத் தமிழகத்தில் 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் தாக்குதலிருந்து காப்பாற்றிக்கொள்ள முக்கிய பங்காக கைகளைச் சுத்தமாக வைத்திருப்பது மிக அவசியம் அதற்காக மத்திய, மாநில அரசுகள் கைகளைக் கழுவுவதற்கு பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT

இந்நிலையில் சேலம் அம்மாபேட்டை சேர்ந்த கட்டட பொறியாளர் வெங்கடாஜலம், தானியங்கி கைகழுவும் இயந்திரத்தைக் கண்டுபிடித்து, அதை இலவசமாக வழங்கத் திட்டமிட்டார்.

அந்தவகையில், ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் பாதுகாப்புப் பணியில் முக்கிய பங்கு வகிக்கும் காவல்துறையினருக்குத் தானியங்கி இயந்திரத்தை இலவசமாக வழங்க முடிவு செய்தார்.

அதன்பேரில் சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு தானியங்கி கைகழுவும் இயந்திரத்தை இலவசமாக வழங்கினார். உதவி ஆணையாளர் ஆனந்தகுமார் மற்றும் காவல் ஆய்வாளர் பொன்ராஜ் முன்னிலையில் தானியங்கி கைகழுவும் இயந்திரத்தை வழங்கினார்.

இதனைத்தொடர்ந்து காவல் நிலையங்களுக்குப் புகார் அளிக்க வரும் பொதுமக்கள் மற்றும் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் காவல் நிலையத்திற்குள் நுழையும் முன்பு கை கழுவுவதற்கு ஏதுவாக காவல் நிலையம் முன்பு தானியங்கி இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தானியங்கி கை கழுவும் இயந்திரத்தை வடிவமைத்த வெங்கடாஜலம் உதவியாக இருந்த ராமச்சந்திரனுக்கு காவல்துறையினர் பாராட்டு தெரிவித்தனர்.

தமிழகத்திலேயே முதன்முறையாக சேலத்தில் தானியங்கி கைகழுவும் இயந்திரத்தைக் காவல்நிலையத்திற்கு வழங்கியதற்கு உயரதிகாரிகள் பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.

தற்போது அஸ்தம்பட்டி, கன்னங்குறிச்சி காவல் நிலையத்திலும் வைக்கப்பட்டு உள்ளது. மாநகரில் உள்ள இதர உள்ள காவல் நிலையங்களில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT