தமிழ்நாடு

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு: தனியார் பயிற்சி மையங்களுக்கு சிபிசிஐடி கடிதம்

29th Sep 2019 12:32 AM

ADVERTISEMENT

நீட் தேர்வு ஆள்மாறாட்டம் குறித்து விரிவான விசாரணை நடத்தும் வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் நீட் தேர்வு பயிற்சி மையங்களுக்கும் சிபிசிஐடி கடிதம் அனுப்பியுள்ளது.
தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். முதலாமாண்டு படித்து வந்த சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த அரசு மருத்துவர் வெங்கடேசன் மகன் உதித் சூர்யா நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. தலைமறைவாக இருந்த உதித் சூர்யாவையும், அவரது தந்தை வெங்கடேசனையும் சிபிசிஐடி போலீஸார் கடந்த 25-ஆம் தேதி கைது செய்தனர்.
இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில், இதேபோல நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மேலும் பல மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்திருப்பதும், இந்த மோசடியில் ஈடுபடுவதற்கு என்று சில தனியார் நீட் தேர்வு பயிற்சி மையங்களும், தரகர்களும் உள்ளதும் தெரியவந்தது.
விரிவான விசாரணை: இந்நிலையில், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவக் கல்லூரியில் சேர்ந்ததாக சென்னை புறநகரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் 3 மாணவர்களையும், அவர்களது பெற்றோரையும் சிபிசிஐடி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பிடித்து விசாரணை செய்தனர். பின்னர் அவர்கள், தேனிக்கு அழைத்துச் செல்லப்பட்டு  விசாரணைக்குப் பின்னர் 3 மாணவர்களும், அவர்களது பெற்றோரும் கைது செய்யப்பட்டனர். 
இந்த வழக்கில் சிபிசிஐடி விரிவான விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக தமிழகம் மட்டுமன்றி கேரளம், மகாராஷ்டிரம், தில்லி ஆகிய இடங்களிலும் இயங்கும் தனியார் நீட் தேர்வு மையங்களில் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது. ஏற்கெனவே, இந்த மோசடியில் ஈடுபட்ட கேரளத்தைச் சேர்ந்த சில தரகர்களை சிபிசிஐடி தங்களது கட்டுப்பாட்டில் வைத்து விசாரித்து வருவதாகக் கூறப்படுகிறது.
பயிற்சி மையங்களுக்கு கடிதம்: இந்நிலையில் இவ்வழக்கின் அடுத்த கட்டமாக தமிழகத்தில் உள்ள அனைத்து நீட் தேர்வு பயிற்சி மையங்களுக்கும் சிபிசிஐடி சனிக்கிழமை கடிதம் அனுப்பியுள்ளது. அதில், அவர்களது பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்களை சமர்ப்பிக்கும்படி சிபிசிஐடி கேட்டுள்ளது. இதேபோல நாடு முழுவதும் நீட் தேர்வை நடத்தும் உத்தரப் பிரதேச மாநிலம்,  நொய்டாவில் உள்ள தேசியத் தேர்வு முகமைக்கும் (என்டிஏ) சிபிசிஐடி கடிதம் அனுப்பியுள்ளது. அதில், தமிழகத்தில் இருந்து நீட் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களில் ஒரே பெயர், முகவரியுடன் ஒன்றுக்கு மேற்பட்ட தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய மாணவர்களின் தகவல்களைக் கேட்டுள்ளது.
இதனால்,  நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மோசடி செய்தவர்களின் மீதான பிடியை சிபிசிஐடி மேலும் இறுக்கியுள்ளது. இந்த மோசடியில் ஈடுபட்ட யாரும் தப்பியோடிவிட முடியாத அளவுக்கு சிபிசிஐடி அதிகாரிகள், வழக்கின் விசாரணையைத் தீவிரப் படுத்துவதற்குரிய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். சிபிசிஐடி கேட்டுள்ள தகவல்கள் கிடைத்ததும் வழக்கின் விசாரணை இன்னும் வேகமெடுக்கும் என காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT