தமிழ்நாடு

அடுத்த கல்வியாண்டு முதல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பூட்ஸ் மற்றும் காலுறை

22nd Sep 2019 03:57 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் அடுத்த கல்வியாண்டு முதல் அனைத்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் பூட்ஸ் மற்றும் காலுறைகள் வழங்கப்படும் என, பள்ளிக் கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 
மதுரை விரகனூரில் சனிக்கிழமை நடைபெற்ற மெட்ரிக். பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணை வழங்கும் விழாவுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியது: 
தமிழகத்தில் மொத்தம் 2,038 மெட்ரிக். பள்ளிகளுக்கு ஆண்டுதோறும் அங்கீகாரம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்குப் பதிலாக 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தொடர் அங்கீகாரம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். 
அடுத்த கல்வியாண்டு முதல் அனைத்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் பூட்ஸ் மற்றும் காலுறைகள் வழங்கப்படும். மேலும், 8, 9 மற்றும் 10-ஆம் வகுப்புகள் படிக்கும் 20 லட்சம் மாணவர்களுக்கு கையடக்கக் கணினிகள் (டேப்லெட்) வழங்கப்படும். அனைத்து அரசுப் பள்ளி வகுப்பறைகளில் இணையதள இணைப்புடன் கூடிய கணினி வசதி ஏற்படுத்தப்படும். அரசுப் பள்ளிகளில் 7 ஆயிரம் ஸ்மார்ட் வகுப்பறைகளும், 60 ஆயிரம் வகுப்பறைகளில் ஸ்மார்ட் போர்டுகளும் அமைத்து கொடுக்கப்படும்.
மேலும், 7,500 அரசுப் பள்ளிகளில் காணொலிக் காட்சி மூலம்  மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க ஏற்பாடு செய்யப்படும். பள்ளிக் கல்வித் துறை மூலம் கல்விக்கென தனியாக தொலைக்காட்சி துவங்கப்பட்டுள்ள நிலையில், இரண்டாவதாக ஒரு தொலைக்காட்சி தொடங்கப்பட உள்ளது. 
மத்திய அரசின் அறிவிப்பை ஏற்று, அனைத்து மாநிலங்களிலும் 5 மற்றும் 8-ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்துவதற்கு தயாராக உள்ளனர். 
ஆனால், தமிழகத்தில் மாணவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, அவர்களுக்கு 3 ஆண்டுகள் திறன் வளர்ப்புப் பயிற்சி அளிக்கப்படும். அதுவரை 5, 8-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றார். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT