தமிழ்நாடு

பொருளாதாரத்தின் அரிச்சுவடி பாஜகவுக்குத் தெரியவில்லை: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

22nd Sep 2019 03:39 AM

ADVERTISEMENT

பொருளாதாரத்தின் அரிச்சுவடி தெரியாதவர்களாக பாஜகவினர் உள்ளனர் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார். 
சென்னை சத்தியமூர்த்தி பவனில் மகாத்மா காந்தி சிலை மற்றும் 150 அடி உயர காங்கிரஸ் கொடி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. கே.எஸ்.அழகிரி அடிக்கல் நாட்டினார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
மகாத்மா காந்தியின் நினைவைப் போற்றும் வகையிலும், அவருக்குப் பெருமை சேர்க்கும் வகையிலும் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி அவரது 150-ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடி வருகிறது. ஆனால், காந்தியின் எண்ணத்துக்கு நேரெதிரான ஆட்சி நடைபெற்று வருகிறது.
நாட்டின் நிதிநிலையைச் சரிசெய்ய முடியாத சூழல் உள்ளது. பெரு நிறுவனங்களுக்கு மத்திய நிதியமைச்சர் வரிச் சலுகையை அறிவித்துள்ளார். பாஜக அரசு, பெருநிறுவனங்களுக்கு 2.5 லட்சம் கோடியைத் தாரை வார்த்துள்ளது. பொருளாதாரத்தின் அரிச்சுவடி கூட பாஜகவினருக்கு தெரியவில்லை. 
காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்துவதற்காகவே ப.சிதம்பரம் உள்ளிட்ட தலைவர்களை கைது செய்து வருகின்றனர். 
கைதுக்கான காரணத்தைக்கூட சிபிஐ இதுவரை தெரிவிக்கவில்லை. குற்றவாளிகளைப் போல நடத்துகின்றனர் என்றார். தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் குமரி அனந்தன், தங்கபாலு, கிருஷ்ணசாமி, திருநாவுக்கரசர், மாநிலப் பொதுச் செயலாளர் கே.சிரஞ்சீவி உள்பட பலர் பங்கேற்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT