கி.மு. 6 -ஆம் நூற்றாண்டிலேயே தமிழர்களிடம் எழுதும் பழக்கம்: நான்காம் கட்ட அகழாய்வு அறிக்கை வெளியீடு

கீழடியில் மேற்கொள்ளப்பட்ட நான்காம் கட்ட அகழாய்வு குறித்த அறிக்கையின் மூலம்  தமிழ்ச் சமூகம் கி.மு.  6-ஆம் நூற்றாண்டிலேயே எழுத்தறிவு பெற்ற சமூகமாக விளங்கியுள்ளது தெரியவந்துள்ளது.
கி.மு. 6 -ஆம் நூற்றாண்டிலேயே தமிழர்களிடம் எழுதும் பழக்கம்: நான்காம் கட்ட அகழாய்வு அறிக்கை வெளியீடு


கீழடியில் மேற்கொள்ளப்பட்ட நான்காம் கட்ட அகழாய்வு குறித்த அறிக்கையின் மூலம்  தமிழ்ச் சமூகம் கி.மு.  6-ஆம் நூற்றாண்டிலேயே எழுத்தறிவு பெற்ற சமூகமாக விளங்கியுள்ளது தெரியவந்துள்ளது.
மதுரை நகருக்கு  தென்கிழக்கில் சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள  கீழடியில் கடந்த 2018-ஆம் ஆண்டில்  தமிழக அரசால் நடத்தப்பட்ட 4-ஆவது அகழ்வாய்வில் கிடைத்த பொருள்களை வைத்து கிடைத்த முடிவுகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. 
அமெரிக்க ஆய்வகத்தில் சோதனையில் வெளியான தகவல்கள்:  கீழடியில் 2018-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட நான்காம் கட்ட அகழாய்வின்போது சேகரிக்கப்பட்ட ஆறு கரிம மாதிரிகள் அமெரிக்க நாட்டின் புளோரிடா மாகாணம், மியாமி நகரத்தில் அமைந்துள்ள பீட்டா பகுப்பாய்வு சோதனை ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டன.  பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்ட மாதிரிகளில் அதிகபட்சமாக 353 செ.மீ. ஆழத்தில் கிடைக்கப் பெற்ற கரிமத்தின் காலம் கி.மு. 580 என்று கணக்கீடு செய்யப்பட்ட ஆய்வறிக்கை கிடைத்துள்ளது. 
இக்கால கணிப்பு  கி.மு. 6-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 1-ஆம் நூற்றாண்டு வரை வளமையான பண்பாடு கொண்ட பகுதியாக கீழடி விளங்கியிருக்க வேண்டும் எனத் தெரிகிறது.  தற்போது கிடைக்கப் பெற்றுள்ள சான்றுகளின் மூலம் வைகை நதிக்கரையில் நகரமயமாதல், கி.மு. 6-ஆம் நூற்றாண்டிலிருந்து தொடங்குகிறது என்பது தெளிவாகிறது.  இதே காலகட்டத்தில்தான் வட இந்தியாவின் கங்கைச் சமவெளிப் பகுதியிலும் நகரமயமாதல் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. 
கீழடி அகழாய்வில் கிடைத்த அறிவியல் ரீதியான காலகணிப்புகள் தமிழ்- பிராமியின் காலம். மேலும், நூறாண்டுகள் (கி.மு.6-ஆம் நூற்றாண்டு) பழமை வாய்ந்தது எனும் முடிவுக்கு நம்மை இட்டுச் செல்கிறது.  இதன் மூலம்   2,600 ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழகம் எழுத்தறிவு பெற்ற சமூகமாக விளங்கியுள்ளதை நிலைநிறுத்த முடிகிறது.
வேளாண்மையே முதன்மைத் தொழில்:  கீழடியிலிருந்து கிட்டத்தட்ட 70 எலும்புத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை (53 சதவீதம்) காளை, எருமை, ஆடு, பசு ஆகியவற்றினுடையவை.  இந்தப் பகுப்பாய்வு முடிவுகளின் மூலம் சங்ககாலச் சமூகம், வேளாண்மையை முதன்மைத் தொழிலாகக் கொண்டிருந்ததோடு கால்நடை வளர்ப்பையும் மேற்கொண்டிருந்தனர் என்பது தெளிவாகிறது. 
கீழடியில் கிடைத்த ஓடுகள், செங்கற்கள், காரை ஆகியவற்றில் மண், சுண்ணாம்பு, இரும்பு, மெக்னீசியம், அலுமினியம் ஆகியவை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.  இங்கு நடத்தப்பட்ட ஆய்வுகளில் சுவர்கள், கட்டடங்களின் இடிபாடுகளும் கிடைத்தன. தரைகள் வழுவழுப்பான களிமண்ணால் மெழுகப்பட்டிருந்தன. கட்டடங்களைப் பொருத்தவரை அவற்றின் சுவர்கள், கூரை வரை எழுப்பப்பட்டிருக்கவில்லை. மாறாக சுவர்களுக்கு அருகில் கம்புகள் நடப்பட்டு கூரைகள் போடப்பட்டிக்கின்றன.  அதே போன்று இந்த கீழடி அகழ்வாய்வில் தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட 56 பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இவற்றில் குவிரன், ஆத(ன்) உள்ளிட்ட பெயர்களும் முழுமையடையாத எழுத்துகளும் கிடைத்துள்ளன. இதில் ஆதன் என்ற பெயர், அதன் என்று குறிப்பிடப்படுகிறது. முற்கால தமிழ் பிராமியில், நெடிலைக் குறிக்க ஒலிக்குறியீடு இடும் வழக்கம் இல்லை என்பதால், இந்த தமிழ் பிராமி எழுத்துகள் காலத்தால் மிகவும் முந்தையவையாகக் கருதப்படுகின்றன.


நெசவுத் தொழில்- தாய விளையாட்டு:   மேலும் கீழடியில் நூல் நூற்கப் பயன்படும் தக்கிளி, தறிகளில் பயன்படுத்தப்படும் தூரிகை, தறியில் தொங்கவிடும் கருங்கல் போன்றவையும் கிடைத்திருப்பதால், இப்பகுதியில் வாழ்ந்தவர்கள் நெசவுத் தொழிலிலும் ஈடுபட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.  இங்கு பல விளையாட்டுப் பொருள்கள் குறிப்பாக ஆட்டக் காய்கள், தாய விளையாட்டிற்கான பகடைக்காய்கள் அதிக அளவில் கிடைத்துள்ளன. இவை பெரும்பாலும் சுட்டமண்ணால் ஆனவை.  அதேபோன்று பெண்கள் விளையாடும் வட்டச்சில்லுகள் 600 எண்ணிக்கையிலும்,  சிறுவர்கள் கயிறு சுட்டி விளையாடும் சுடுமண்ணாலான வட்டச் சுற்றிகள்,  வண்டி இழுத்து விளையாடும் வண்டிகளின் சக்கரங்கள் கிடைத்துள்ளன. மேலும் பெரியவர்கள் தங்கள் திறமையில் வெளிப்படுத்தும் வகையில் விளையாடும் சதுரங்க விளையாட்டுக்குப் பயன்படும் பல்வேறு அளவிலான 80 சதுரங்கக் காய்கள் கிடைத்துள்ளன. 
தமிழகத்தில் ரோம்  வணிகர்கள்:  மேலும், வடமேற்கு இந்தியாவின் மகாராஷ்டிரம், குஜராத் போன்ற பகுதிகளில் பரவலாகக் காணப்படும் அகேட் மற்றும் கார்னீலியம் கற்களால் ஆன மணிகளும் கிடைத்துள்ளன. 
ரோம் நாட்டை சேர்ந்த அரிட்டைன் பானை ஓடு மண்ணடுக்கின் மேல் நிலையில் கிடைத்திருக்கிறது. இவை ரோம் நாட்டில் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் புழக்கத்தில் இருந்தவை. எனவே, ரோம் நாட்டைச் சேர்ந்த வணிகர்கள் அல்லது அழகன்குளத்தில் தங்கியிருந்த ரோம் நாட்டைச் சேர்ந்த வணிகர்கள் இந்தப் பகுதிக்கு வந்திருக்கலாம்.
இங்கு ஒட்டுமொத்தமாக சுடுமண்ணாலான 13 மனித உருவங்கள், 3 விலங்கு உருவங்கள், 650-க்கும் மேற்பட்ட விளையாட்டுப் பொருள்கள், 35 காதணிகள், பிற அணிகலன்கள் கிடைத்துள்ளன. ஆனால், வழிபாடு தொடர்பான தொல்பொருள்கள் எவையும் தெளிவான முறையில் இதுவரை கிடைக்கவில்லையென தொல்லியல் துறையின் ஆய்வறிக்கை கூறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com