சென்னையில் இந்த ஆண்டின் முதல் கன மழை நாள் இன்று: எப்படி இருக்கிறது நகரம்?

இந்த ஆண்டின் முதல் கன மழை நாளை சென்னை மாநகரம் நேற்று இரவு சந்தித்தது. சென்னையில் மட்டும் நேற்று இரவு முதல் 10.4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
சென்னையில் இந்த ஆண்டின் முதல் கன மழை நாள் இன்று: எப்படி இருக்கிறது நகரம்?


சென்னை: இந்த ஆண்டின் முதல் கன மழை நாளை சென்னை மாநகரம் நேற்று இரவு சந்தித்தது. சென்னையில் மட்டும் நேற்று இரவு முதல் 10.4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

புதன்கிழமை நள்ளிரவில் ஆரம்பித்த மழை வியாழக்கிழமை காலை வரை ஓய்ந்தபாடில்லை. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை எதிர்பார்த்த மாணவ, மாணவிகளும், அவர்களது பெற்றோரும், வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும் என்ற அறிவிப்பினால் ஏமாற்றம் அடைந்தனர். வாடி வதங்கிய முகத்தோடு பள்ளி, கல்லூரிகளுக்கு புறப்பட்டுச் சென்றனர் மாணவ, மாணவிகள்.

கன மழை காரணமாக மண்ணடியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 45 வயது ஸரீனா பானு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஒரு நாள் மழைக்கே சென்னை மாநகரம் முழுவதும் பல இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்தது. குறிப்பாக பெசன்ட் நகர் மற்றும் திருவல்லிக்கேணி பகுதிகளில் மழை நீர் சாலைகளில் தேங்கியதால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

சேத்துப்பட்டு சுரங்கப் பாதை வெள்ளம் போல காட்சியளித்தது. சுரங்கம் முழுவதும் தண்ணீர் நிரம்பியதால் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதுபோல முக்கிய சுரங்கப் பாதைகளிலும் தண்ணீர் நிரம்பியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.

தாழ்வான பகுதிகளில் எல்லாம் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியதைப் பார்த்த பொதுமக்கள், ஒரு நாள் மழைக்கே நகரம் இப்படி ஆகிவிட்டதே என்று கண்ணீர் விட்டனர்.

வளிமண்டலத்தில் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சி காரணமாகவே கன மழை பெய்திருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2017ம் ஆண்டு நவம்பர் மாதத்துக்குப் பிறகு சென்னை மாநகரம் சந்தித்த மிக கன மழை நாளாக இது இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com