பேனர் விழுந்து இளம்பெண்  மரணம்:  அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது மேலும் ஒரு பிரிவில் வழக்குப்பதிவு 

சென்னை அருகே பள்ளிக்கரணையில் பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ மரணமடைந்த வழக்கில், அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது மேலும் ஒரு பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மரணமடைந்த இளம்பெண் சுபஸ்ரீ
மரணமடைந்த இளம்பெண் சுபஸ்ரீ

சென்னை: சென்னை அருகே பள்ளிக்கரணையில் பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ மரணமடைந்த வழக்கில், அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது மேலும் ஒரு பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை பள்ளிக்கரணையில் கடந்த 12-ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் சுபஸ்ரீ மீது சாலை நடுவில் கட்டப்பட்டிருந்த பேனர் விழுந்ததில், நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது, அவ்வழியாக வந்த தண்ணீர் லாரி  அவர் மீது ஏறியது. பலத்த காயமடைந்த அவர் சம்பவ  இடத்திலேயே உயிரிழந்தார். விதிமுறைகளை மீறி அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் பேனர் வைத்ததே மரணத்திற்கு காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டது.

இது தொடர்பான வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது சுபஸ்ரீ விவகாரத்தில் விதி மீறி பேனர் வைக்க அனுமதித்தோர் மீதும், வைத்தவர் மீதும் அரசுத் தரப்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என நீதிபதிகள் கேள்வியெழுப்பினர்.  இதற்கு பதிலளித்த அரசுத் தரப்பு வழக்குரைஞர், லாரி ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம். வழக்கு பதிவு செய்துள்ளோம். அதேபோல், பேனர் அச்சடித்த கடைக்கு சீல் வைத்துள்ளோம் என்றனர்.

இதைக் கேட்டு கோபம் அடைந்த நீதிபதிகள், "அப்படியென்றால் பேனர் வைக்க சொன்னவர்கள் மீது நடவடிக்கை இல்லையா?. பேனர் யாருக்காக வைக்கப்பட்டது? அவர்கள் பெயர் குற்றச்சாட்டில் சேர்க்கப்படவில்லையா?' என்று கடுமையாக கேள்வி எழுப்பினர். காவல் துறைக்கு நீதிமன்றம் இந்த வழக்கு தொடர்பாக தனது அதிருப்தியை தெரிவித்தது.

இதற்கிடையே, நெஞ்சு வலி ஏற்பட்டதாகக் கூறி சென்னை பள்ளிக்கரணையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஜெயகோபால் சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்பேரில் சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கையில் ஜெயகோபாலின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சுபஸ்ரீ மரணமடைந்த வழக்கில், அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது மேலும் ஒரு பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மரணம் விளைவிக்கும் குற்றத்தை செய்ய முயற்சித்தல் என்ற வகையில் இ.பி.கோ 308 பிரிவின் கீழ் ஜெயகோபால் மீது பரங்கிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com