தமிழ்நாடு

100% தமிழக தயாரிப்பு மின்சார வாகனங்களுக்கு  வரி விலக்கு: புதிய கொள்கையை வெளியிட்டார் முதல்வர்

17th Sep 2019 04:52 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 100 சதவீதம் வரி (ஜிஎஸ்டி) விலக்கு அளிக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்ட தமிழ்நாடு மின்சார வாகனக் கொள்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மின்சார வாகனங்கள் சார்ந்த உதிரி பாகங்களின் தயாரிப்புக்கு ஊக்கமளிக்கும் வகையில் பல்வேறு சலுகைகள் புதிய கொள்கையில் இடம்பெற்றுள்ளன.

சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மின்சார வாகனக் கொள்கையை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எம்.சி.சம்பத் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.  சுற்றுச்சூழலை பாதுகாத்து, காற்று மாசுபடுவதை குறைக்கும் வகையில் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை தமிழகத்தில் உற்பத்தி செய்வதற்கு ஏதுவாக, "தமிழ்நாடு மின்சார வாகனக் கொள்கை 2019' தயாரிக்கப்பட்டுள்ளது. 

கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்கள்: தமிழகத்தில் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் மின்சார வாகனங்களுக்கான மாநில சரக்கு மற்றும் சேவை வரி 100 சதவீதம் திருப்பி அளிக்கப்படும். இந்தச் சலுகை 2030-ஆம் ஆண்டு வரை நடைமுறையில் இருக்கும். மின்சார வாகனங்கள் உற்பத்திக்கான முதலீடுகளுக்கு 15 சதவீதம் வரையிலும், மின்கலம் உற்பத்திக்கான முதலீடுகளுக்கு 20 சதவீதம் வரையிலும் மூலதன மானியம் அளிக்கப்படும். இந்தச் சலுகை 2025-ஆம் ஆண்டு வரை செய்யப்படும் முதலீடுகளுக்குப் பொருந்தும்.

ADVERTISEMENT

மின்கலன்கள் உற்பத்தி: அரசு தொழிற் பூங்காக்களில் மின்சார வாகனங்கள், மின்னேற்று உபகரணங்கள், மின்கலன்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை அமைக்க முன்வரும் நிறுவனங்களுக்கு நிலத்தின் விலையில் 20 சதவீதம் வரை மானியமாக அளிக்கப்படும். தென் மாவட்டங்களில் செய்யப்படும் இத்தகைய முதலீடுகளுக்கு நிலத்தின் மதிப்பில் 50 சதவீதம் மானியமாக வழங்கப்படும். இந்தச் சலுகை 2022-ஆம் ஆண்டு வரை செய்யப்படும் முதலீடுகளுக்கு பொருந்தும்.

மின்சார வாகனங்கள், மின்னேற்று உபகரணங்கள் உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலை அமைக்க நிலம் வாங்கும் போது 100 சதவீதம் முத்திரைத்தாள் கட்டண விலக்கு அளிக்கப்படும். இந்தச் சலுகை 2022-ஆம் ஆண்டு வரை செய்யப்படும் முதலீடுகளுக்கு பொருந்தும். மின்சார வாகனங்கள், மின்னேற்று உபகரணங்கள் உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனங்களுக்கு 100 சதவீதம் மின்சார வரி விலக்கு அளிக்கப்படும்.

மின்சார வாகனங்கள், மின்கல உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மூலமாக அதிக வேலைவாய்ப்புகள் உருவாக்குவதை உறுதி செய்திட அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மின்சார வாகனங்கள், மின்னேற்று உபகரணங்கள் உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனங்கள் 2025-ஆம் ஆண்டு வரை உருவாக்கும் ஒவ்வொரு புதிய வேலைவாய்ப்புக்கும், நிறுவனங்களின் பங்களிப்பாகச் செலுத்திய தொழிலாளர் சேமநல நிதிக்கு ஈடான தொகை மானியமாக வழங்கப்படும்.

மின்சார வாகனங்களுக்கான உதிரி பாகங்கள், மின்னேற்று உபகரணங்கள் உற்பத்தியில் ஈடுபடும் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு இப்போது மூலதன மானிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்டுள்ள தகுதி வரம்பை விட 20 சதவீதம் கூடுதல் மூலதன மானியம் அளிக்கப்படும்.

ரூ.50 ஆயிரம் கோடிக்கு முதலீடுகளை ஈர்க்கத் திட்டம்

முதல் மின்சார வாகனக் கொள்கையின் மூலமாக ரூ.50 ஆயிரம் கோடிக்கு முதலீடுகளை ஈர்க்கத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இந்த முதலீடுகள் மூலமாக 1.5 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் மின்சார வாகனங்களின் மொத்த எண்ணிக்கை 9.8 கோடியாக இருக்கும்.

அடுத்த பத்து ஆண்டுகளில் தமிழகத்தின் ஆறு மாநகரங்களில் மின்சார ஆட்டோக்கள் இயக்கப்படும். சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம், திருநெல்வேலி ஆகிய ஆறு மாநகரங்களில் உள்ள அனைத்து ஆட்டோக்களும் மின்சாரத்தில் இயங்கும் வகையில் மாற்றப்படும்.  அதைத் தொடர்ந்து அனைத்து இடங்களிலும் படிப்படியாக மின்சார ஆட்டோக்கள் இயக்கப்படும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT